ஓமன் கடலில் மூழ்கிய சரக்குக்கப்பல் - 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்

By KU BUREAU

டுக்கும்: ஓமன் கடலில் மூழ்கிய கண்டெய்னர் கப்பலில் பணியாற்றிய 13 இந்தியர்கள் உட்பட 16 பேரின் கதி என்ன என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆப்பிரிக்க நாடான கொமாராஸ் நாட்டைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று ஏடன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓமன் நாட்டின் டுக்கும் துறைமுகத்தின் அருகே கடந்த திங்கட்கிழமையன்று சென்று கொண்டிருந்த போது, திடீரென கப்பல் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக இது தொடர்பாக துறைமுக அதிகாரிகள் மற்றும் சர்வதேச கடல் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு ஓமன் நாட்டின் கடலோர காவல் படை சென்று ஆய்வு நடத்திய போது, கப்பல் தலைகீழாக கவிழ்ந்து இருந்தது தெரியவந்தது. இருப்பினும் கப்பலில் இருந்த 13 இந்தியர்கள், 3 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 16 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இது குறித்த தகவல் அறிந்ததும் இந்திய கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் டெக், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக விரைந்துள்ளது. இருப்பினும் இதுவரை கப்பலில் இருந்து யாரும் மீட்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கப்பலில் எண்ணெய் பொருட்கள் இருந்ததா, அது கடலில் கலந்து வருகிறதா என்பது குறித்த தகவலையும் ஓமன் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE