வட கொரியப் போர் விமானங்கள் தங்கள் வான் எல்லை அருகே பறந்ததால், அவற்றை விரட்ட 80 போர் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதாகத் தென் கொரியா தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் ‘விழிப்புணர்வுப் புயல்’ (Vigilant Storm) எனும் பெயரில் நடத்தப்பட்ட அமெரிக்க ராணுவமும், தென் கொரிய ராணுவம் போர் ஒத்திகை நடத்தின. வான்வழித் தாக்குதலுக்கான இந்த ஒத்திகையில் ஏராளமான போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் வட கொரியா ஆத்திரமடைந்தது.
இதையடுத்து, தென் கொரியாவை எச்சரிக்கும் விதமாக, நவம்பர் 2-ல் வட கொரியா ஏவிய ஏவுகணை தென் கொரியக் கடற்கரைக்கு அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் விழுந்தது. அதற்குப் பதிலடி தரும் வகையில், தென் கொரியாவின் போர் விமானங்களிலிருந்து மூன்று ஏவுகணைகள் வட கொரியாவை நோக்கி ஏவப்பட்டன.
கடந்த இரு நாட்களில் 30 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்திருக்கிறது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், வட கொரிய விமானப் படையின் 180 போர் விமானங்கள் இன்று காலை தென் கொரியாவின் வடக்கு எல்லை அருகே பறந்து சென்றன. இதை அறிந்ததும், தென் கொரிய விமானப் படையைச் சேர்ந்த எஃப்-35ஏ போர் விமானங்கள் உட்பட 80 விமானங்கள், வட கொரிய விமானங்களை விரட்டும் வகையில் பறந்துசென்றன.
விழிப்புணர்வுப் புயல் ஒத்திகையில் பயன்படுத்தப்பட்ட 240 விமானங்களும் பறந்துசென்றதாகத் தென் கொரியா தெரிவித்திருக்கிறது.