இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பேற்ற சூட்டில் பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து 4 ராக்கெட்டுகள் இஸ்ரேலை குறிவைத்து ஏவப்பட்டன.
இஸ்ரேல் தேசத்தின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். அந்நாட்டின் அரசியல் ஆளுமைகளில் கடந்த கால்நூற்றாண்டு காலமாக பெஞ்சமின் நெதன்யாகு ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 1996ல் இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற பெஞ்சமின் 1999 வரை அப்பதவியில் நீடித்தார். அதன் பின்னர் பத்தாண்டுகள் இடைவெளியில் மீண்டும் 2009ல் ஆட்சியை பிடித்தவர் 2021 வரை மாமாங்க காலம் இஸ்ரேலை வழி நடத்தினார். இந்த காலத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் இந்திய பிரதமர் மோடி வரை பல்வேறு நாடுகளின் தலைவர்களோடு நெருக்கம் பாராட்டினார்.
பெஞ்சமினின் கூட்டணி பெரும்பான்மை இழந்ததை அடுத்து எதிர்தரப்பை சேர்ந்த நப்தாலி பென்னட் புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சியை பிடித்தார். ஆனால் அவரது பதவிக்காலம் சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றியை அவரது ஆதரவாளர்களை கொண்டாடும் நாளில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி 4 ராக்கெட்டுகள் பாய்ந்துள்ளன. இவற்றில் சிலதை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வானிலேயே இடைமறித்து அழித்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு, தங்களது தளபதி ஒருவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் படுகொலை செய்யப்பட்டதற்கான பதிலடி என தெரிவித்துள்ளது. உண்மையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவியேற்புக்கு பாலஸ்தீனம் நெடுக அச்சம் ஆக்கிரமித்துள்ளது. பாலஸ்தீனம் மற்றும் அதன் விடுதலை குழுக்களுக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனி புதிய வியூகம் பெற வாய்ப்புள்ளது.
தீவிர வலதுசாரியான பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி ஹூப்ரு மொழியில் தனது பிரத்யேக வாழ்த்தினை ட்விட்டரில் பதிந்திருந்தார். ராணுவ தளவாடங்கள் மற்றும் உளவு உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்கியதில் இஸ்ரேல் காட்டிய தாராளமும், பிரத்யேகமும் இரு நாட்டு நெருக்கத்துக்கு காரணமாயின. இஸ்ரேலுடனான இந்தியாவின் ராணுவ கொள்முதல் இனி வேகமெடுக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.