ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியை மொத்தமாக மூடிய சீனா: காரணம் என்ன?

By காமதேனு

ஐபோன் தயாரிப்பில் உலகின் மிகப் பெரிய நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியை மூட சீன அரசு இன்று உத்தரவிட்டிருக்கிறது.

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனான் மாகாணத்தின் தலைநகரமான செங்க்சாவில் உள்ள விமான நிலையப் பொருளாதார மண்டலத்தில், ஐபோன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கிவருகிறது. தைவானைச் சேர்ந்தவர்கள் நடத்தும் இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பணிபுரிந்துவருகின்றனர். ஏறத்தாழ, உலகின் 50 சதவீத ஐபோன்கள் இங்குதான் தயாராகின்றன.

சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸின் திரிபுகள், துணைத் திரிபுகள் வேகமாகப் பரவிவருகின்றன. ஃபாக்ஸ்கான் ஐபோன் தொழிற்சாலையிலும் சிலருக்குத் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த சில வாரங்களாக ஃபாக்ஸ்கான் ஐபோன் நிறுவனத் தொழிற்சாலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களுக்கான உதிரி பாகங்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய ‘ஐபோன் - 14’ செல்போன்களை ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. விடுமுறை நாட்கள் தொடங்கவிருக்கும் நிலையில், அதன் உற்பத்திய அதிகரிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்காக, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் உதிரி பாகங்களின் உற்பத்தியைத் தொடர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய சூழல். இதனால், தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறிவிடாத வகையிலான ஏற்பாடுகளை அந்நிறுவனம் செய்தது. கடும் கட்டுப்பாடுகள், போதிய உணவு வழங்கப்படாதது போன்ற காரணங்களால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகளைத் தவிர்க்க, அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அந்நிறுவனத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலிகளில் ஏறிக் குதித்து, தங்கள் சொந்த ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினர். சிலர் கிடைத்த வாகனங்களில் தொற்றிக்கொண்டு பயணித்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைந்திருக்கும் பகுதியை சீன அதிகாரிகள் இன்று அதிரடியாக மூடினர். கோவிட் தடுப்பு தன்னார்வலர்கள் போன்றோரைத் தவிர வேறு யாரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. கரோனா தொற்றுப் பரிசோதனை, அவசரகால மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை விற்கும் வாகனங்கள் ஆகியவற்றைத் தவிர பிற வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE