பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

By காமதேனு

பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் ட்ரஸ் விலகியிருக்கும் நிலையில், அடுத்த பிரதமர் யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்ஸன், பல்வேறு பிரச்சினைகள், குற்றச்சாட்டுகள் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். சர்ச்சைக்குரிய எம்.பி க்றிஸ் ஃபிஞ்சரை, துணைத் தலைமைக் கொறடாவாக நியமித்தது, கரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தனது பிறந்தநாளை மதுவிருந்துடன் கொண்டாடியது, பணவீக்கம் அதிகரிப்பு, வரி உயர்வு உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவை. பின்னர் லிஸ் ட்ரஸ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கொண்டுவந்த மினி பட்ஜெட்டுக்கு அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்த பட்ஜெட்டை முன்வைத்து லிஸ் ட்ரஸ்ஸைக் கடுமையாக விமர்சித்தார். எதிர்ப்புகள் அதிகமான நிலையில், நிதியமைச்சராக இருந்த குவாஸி க்வார்டெங் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும், உக்ரைன் போர் நடந்துவரும் காலகட்டத்தில் வரி விஷயத்தில் குளறுபடி செய்து, விலைவாசி உயர்வுக்குக் காரணமாக இருந்ததாக லிஸ் ட்ரஸ் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. அவர் பிரிட்டன் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குரல்கள் ஒலித்தன.

சூயெல்லா பிரேவர்மேன்

இந்நிலையில், இன்று அவர் பதவிவிலகினார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக், சூயெல்லா பிரேவர்மேன், பென்னி மோர்டான்ட், பென் வாலஸ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்ஸன் பதவி விலகிய பின்னர், அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்த தேர்தலில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தவர். 42 வயதாகும் அவர், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் பிரதமர் எனும் பெருமை அவருக்குக் கிடைக்கும். பிரதமர் ரேஸில் இருக்கும் சூயெல்லா ப்ரேவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE