வெளியுறவுத் துறை அமைச்சர்களாகப் பதவிவகிக்கும் பெண்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு கனடா ஏற்பாடு செய்திருக்கிறது. காணொலி வழியாக இன்று நடைபெறும் இந்த மாநாட்டுக்கு கனடா வெளியுறவுத் துறை அமைச்சரான மெலனீ ஜாலி தலைமை வகிக்கிறார்.
ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த, 22 வயதான மஹஸா ஆமினி சமீபத்தில் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றிருந்தார். அவர் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி செப்டம்பர் 13-ல் அந்நகர போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதால் கோமா நிலைக்குச் சென்று பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராகப் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில் பெண்களின் அடிப்படை உரிமைகளை போலீஸார் நசுக்குவதாகக் கூறி ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாபைக் கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, கணிசமான எண்ணிக்கையில் ஆண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க ’பஸிஜ்’ என அழைக்கப்படும் துணை ராணுவப் படையை ஈரான் அரசு பயன்படுத்துகிறது. போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் நிலையில், ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில், ஈரான் நிலவரத்தைப் பற்றி விவாதிக்க 14 நாடுகளில் வெளியுறவுத் துறை அமைச்சர்களாகப் பதவிவகிக்கும் பெண்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தை கனடா நடத்துகிறது.
“நானும் பிற வெளியுறவுத் துறைப் பெண் அமைச்சர்களும் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தின் மூலம், ஈரான் அரசுக்கு ஒரு தெளிவான செய்தி தெரிவிக்கப்படுகிறது. போராட்டம் நடத்திவருபவர்களுக்கு எதிராக, குறிப்பாக பெண்களுக்கு எதிராகk கொடூரமான முறையில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்துவிதமான வன்முறையையும் ஈரான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி” என்று கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனீ ஜாலி கூறியிருக்கிறார். மேலும், “தங்கள் தாய்மார்கள், சகோதரிகள், துணைவிகள் மற்றும் மகள்களுக்கு ஆதரவாகப் போராடுகின்ற, துணிச்சல் மிக்க ஈரானியர்களுக்குக் கனடா தொடர்ந்து துணை நிற்கும். மகளிர் உரிமை என்பது மனித உரிமை” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஈரானில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் குற்றம்சாட்டி, அந்நாட்டின் உள் துறை இணை அமைச்சர் மஜீத் மிராஹ்மதி உள்ளிட்ட ஆறு பேர் மீதும், நான்கு நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை மெலனீ ஜாலி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.