மஹஸா ஆமினி எனும் இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாத காரணத்தால் கைதுசெய்யப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஈரான் அரசுக்கு எதிராக உக்கிரமான போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிடுவது அமெரிக்காதான் என ஈரான் அதிபர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஈரானின் வடமேற்கில் உள்ள குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த, 22 வயதான மஹஸா ஆமினி சமீபத்தில் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றிருந்தார். அவர் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி செப்டம்பர் 13-ல் அந்நகர போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும், அவரது தலையில் பலமாக அடிபட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, போலீஸ் வேனில் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் தாக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர்.
எனினும் போலீஸார் அதை மறுத்தனர். செப்டம்பர் 16-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில் பெண்களின் அடிப்படை உரிமைகளை போலீஸார் நசுக்குவதாகக் கூறி ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாபைக் கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க ’பஸிஜ்’ என அழைக்கப்படும் துணை ராணுவப் படையை ஈரான் அரசு பயன்படுத்துகிறது. போராட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் நிலையில், ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஈரானின் குடிமக்களுக்கு, குறிப்பாக துணிச்சலான பெண்களுக்குத் துணை நிற்கிறோம். ஈரானில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது எது என்று திகைத்துவிட்டேன்” என்று கூறியிருந்தார். மேலும், இந்தப் போராட்டம் முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், “ஒரு நாட்டில் குழப்பத்தையும் வன்முறையையும் தூண்டி அழிவை ஏற்படுத்துபவர் அமெரிக்க அதிபர். அவரது இந்தக் கருத்து, அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த இஸ்லாமியக் குடியரசின் நிறுவனரின் (அயதுல்லா கோமேனி) வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது” என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரயீஸி கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்துவரும் போராட்டங்களைத் தூண்டிவிடுவது அமெரிக்கா தான் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதே கருத்தை அதிபர் இப்ராஹிம் ரயீஸியும் விமர்சித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘எதிரியின் சதியை முறியடிக்க, ஈரான் மக்களின் பிரச்சினைகளைக்குத் தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து 2018-ல் விலகிய அமெரிக்கா, அதன் பின்னர் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. தற்போது நடந்துவரும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவரும் ஈரான் அரசு அதிகாரிகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. ஈரானின் அறநெறிக் காவலர்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா சமீபத்தில் விதித்தது குறிப்பிடத்தக்கது.