‘எச்சரிக்கை: எங்களுடன் நேட்டோ மோதினால் உலகளாவிய பேரழிவு!’

By காமதேனு

“ரஷ்ய ராணுவத்துடன் நேட்டோ படைகள் மோதுவது உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும்” என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்திருக்கிறார்.

பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்குக் கடந்த சில வாரங்களாகக் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறது உக்ரைன் ராணுவம். இந்தச் சூழலில் உக்ரைனின் டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்ஸான், ஸாப்போரிஸியா ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்திருக்கும் புதின், அந்நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

இதையடுத்து, உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதலில் ரஷ்யா இறங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் என பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பு எச்சரித்தது.

இந்நிலையில், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “ரஷ்ய ராணுவத்துடன் நேட்டோ படைகள் நேரடியாகத் தொடர்பு கொண்டாலோ, நேரடியாகவோ மோதினாலோ அது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE