காலிஸ்தான் ஆதரவாளருக்கு எதிராக ’ரெட் கார்னர் நோட்டீஸ்’ அறிவிக்க மறுப்பு: இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது ஏன்?

By சந்தனார்

காலிஸ்தான் ஆதரவாளரான குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்க இன்டர்போல் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக இந்தியா அனுப்பிய மனுவை, சில கேள்விகளுடன் அந்த அமைப்பு திருப்பி அனுப்பியிருக்கிறது.

யார் இந்த குர்பத்வந்த் சிங்?

பஞ்சாப், ஹரியாணா, இமாசல பிரதேசம், டெல்லி என வட இந்தியாவின் பல முக்கியப் பகுதிகளை இணைத்து காலிஸ்தான் எனும் தனி தேசத்தை உருவாக்கும் நோக்கத்துடன் காலிஸ்தான் இயக்கத்தினர் பல தசாப்தங்களாகச் செயல்பட்டுவருகின்றனர். தற்போது கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் முக்கியமானது ‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பு.

‘சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் ’ எனும் பெயரில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தை நடத்திவருபவர் குர்பத்வந்த் சிங் பன்னூன். இவர் பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கான்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர். சட்டம் பயின்றவரான குர்பத்வந்த் சிங் பன்னூன், அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டவர். 2007-ல் நியூயார்க்கில் இந்த அமைப்பை ஒரு தொண்டு நிறுவனமாகத் தொடங்கினார். அமெரிக்காவிலும் கனடாவிலும் இந்த அமைப்பை அவர் நடத்திவருகிறார்.

குர்பத்வந்த் சிங் பன்னூன்

அத்துடன், அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ வரும் இந்தியத் தலைவர்கள் மீது வழக்கு தொடர்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். சீக்கியர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக அந்த வழக்குகளில் அவர்கள் மீது குர்பத்வந்த் சிங் பன்னூன் குற்றம்சாட்டுவார். இதுவரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த சுக்பீர் சிங் பாதல், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது இப்படி வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

2016-ல் இப்படியான வழக்கு ஒன்றின் காரணமாக, பஞ்சாபின் அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங் தனது கனடா பயணத்தையே ரத்துசெய்ய வேண்டிவந்தது.

மேலும், இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவரது அமைப்பின் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. இமாசல பிரதேச சட்டப்பேரவையின் பிரதான வாசல் அருகே காலிஸ்தான் ஆதரவு பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவத்தில் இந்த அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான செயல்களைச் செய்வதாகக் கூறி 2019-ல் இந்த அமைப்பை மத்திய அரசு தடைசெய்தது.

குர்பத்வந்த் சிங் பன்னூனின் நெருங்கிய கூட்டாளியான ஜஸ்வீந்தர் சிங் முல்தானி, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றம்சாட்டியது. அவரது தலைக்கு 10 லட்சம் ரூபாய் விலை அறிவித்தது.

அதேபோல், லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில், 2021 டிசம்பர் 23-ல் நடந்த குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டவர் என ஜஸ்விந்தர் சிங் முல்தானி எனும் நபர் ஜெர்மனியில் கைதுசெய்யப்பட்டார். அவர், குர்பத்வந்த் சிங் பன்னூனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனக் கூறப்படுகிறது.

மறுத்தது ஏன்?

இப்படியான பின்புலம் கொண்ட குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அறிவிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பிலிருந்து, சர்வதேசக் குற்றவியல் காவல் அமைப்பான இன்டர்போலுக்குக் கோரிக்கை அனுப்பப்பட்டது. ஒருவருக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அறிவிக்கப்பட்டால், அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டறிந்து, அவர் மீது கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கும். இன்டர்போல் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் முன்வைக்கும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, அந்தக் கோரிக்கைகள் இன்டர்போலின் விதிமுறைகளுக்குட்பட்டவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை ஆகும். ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது சர்வதேச கைது வாரன்ட் அல்ல என்றும் இன்டர்போல் இணையதளம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்தச் சூழலில், குர்பத்வந்த் சிங் பன்னூனுக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்க இன்டர்போல் மறுத்ததுடன், இதுதொடர்பாக சில கேள்விகளுடன் அந்த மனுவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டது.

இதையடுத்து, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தை (உபா சட்டம்) இந்தியா தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி இன்டர்போல் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும், அதை மத்திய அரசு வட்டாரங்கள் மறுத்திருக்கின்றன. இப்படியான கருத்துகளை இன்டர்போல் தெரிவிக்காது என்றும் அதிகாரிகள் சிலர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE