பிரபல மல்யுத்த வீராங்கனையான சாரா லீ இன்று காலமானார். 30 வயதான சாராவின் திடீர் மரணம், மல்யுத்த உலகைச் சேர்ந்தவர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
1992 ஜூன் 7-ல் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஹோப் டவுன்ஷிப் பகுதியில் பிறந்தவர் சாரா லீ. இளம் வயதிலிருந்தே வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்றார்.
2015-ல், டபிள்யூ.டபிள்யூ.ஈ (World Wrestling Entertainment) நடத்திய ‘டஃப் இனஃப்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்ற இருவரில் சாராவும் ஒருவர். சாரா லீயின் கணவர் வெஸ்டின் பிளேக்கும் மல்யுத்த வீரர்தான். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், சாரா லீ இன்று மரணமடைந்ததாக அவரது தாயார் டெர்ரி லீ சமூகவலைதளப் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அவரது மறைவுச் செய்தி அறிந்து சர்வதேச மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். ஏராளமான ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி தெரிவித்திருக்கிறார்கள்.
சாரா லீ மரணமடைந்தது எப்படி எனும் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.