காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் சிரப்கள் குறித்து WHO எச்சரிக்கை

By காமதேனு

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்ததை அடுத்து, ஹரியானாவை சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த நான்கு இருமல் சிரப்கள் குறித்து மத்திய அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய 4 இருமல் சிரப்கள் குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆணையத்தை (டிசிஜிஐ) உலக சுகாதார நிறுவனம் செப்டம்பர் 29 அன்று எச்சரித்தது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உடனடியாக ஹரியானா ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கையை கோரியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள இந்த இருமல் சிரப்கள் ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி, இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளை காம்பியாவிற்கு ஏற்றுமதி செய்தது உறுதியாகியுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு மெய்டன் பார்மாசூட்டிகல் நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இந்தியாவில் தயாரான நான்கு சளி மற்றும் இருமல் சிரப்கள் கடுமையான சிறுநீரக காயங்கள் மற்றும் காம்பியா குழந்தைகளின் 66 இறப்புகளுடன் தொடர்புடையவை" என்று கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம்

இதுவரை, இந்த இருமல் மருந்து தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து அதன் உற்பத்தியாளர் உலக சுகாதார நிறுவனத்துக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தயாரிப்புகளின் மாதிரிகளின் ஆய்வக பகுப்பாய்வுகளில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டை எத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த பொருட்கள் மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை மற்றும் ஆபத்தானவை. மேலும் இதன் நச்சு விளைவு காரணமாக குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மாற்றப்பட்ட மனநிலை, கடுமையான சிறுநீரக காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், ப்ரோமெதாசின் வாய்வழி மருந்து (Promethazine Oral Solution), கோஃபெக்ஸ்மாலின் குழந்தை இருமல் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ( Magrip N Cold Syrup) ஆகிய இந்த நான்கு சிரப்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது. மேலும், இந்த மருந்துகள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டிருந்தாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE