முறையாக ஹிஜாப் அணியாத காரணத்தால் கைதுசெய்யப்பட்ட மஹஸா ஆமினி எனும் இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு எதிராக ஈரான் நாட்டுப் பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகளும் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.
மஹஸா ஆமினி (22) எனும் பெண், தனது குடும்பத்தினருடன் தலைநகர் டெஹ்ரானுக்குச் சமீபத்தில் சென்றிருந்தார். செப்டம்பர் 13 அன்று, அவர் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி, அந்நகர போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர் கோமா நிலைக்குச் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 16-ல் உயிரிழந்தார். கைதுசெய்யப்பட்ட பின்னர் அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும், அவரது தலையில் பலமாக அடிபட்டதால்தான் அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, போலீஸ் வேனில் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் தாக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனினும் போலீஸார் அதை மறுத்தனர்.
ஆமினியின் மரணத்தைத் தொடர்ந்து, ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில் ஈரான் நாட்டுக் காவலர்கள் அடக்குமுறை செய்வதாக பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சாகேஸில் நேற்று நடந்த இறுதிச்சடங்கின்போது ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாபைக் கழற்றி வீசினர், மேலும், ‘சர்வாதிகாரிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என்றும் முழக்கமிட்டனர். தொடர்ந்து ஈரானில் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தப் போராட்டம் பரவியது.
இந்தப் போராட்டங்களை முடக்க, ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்திருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டங்களுக்கு ஈரானைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். போராட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் ஆண்களும் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற பாப் பாடகரான ஷிர்வின் ஹாஹிபோர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக அவர் உருவாக்கிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் போராட்டங்களுக்கான தேசிய கீதமாக அந்தப் பாடல் பிரபலமடைந்த நிலையில் அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. எனினும், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஈரான் பெண்களும் ஆண்களும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர், டெஹ்ரானின் மேற்குப் பகுதியில் உள்ள கராஜ் நகரில் உள்ள பள்ளியின் மாணவிகள், ஹிஜாப் அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி காமேனியை சர்வாதிகாரி என விளித்து முழக்கம் எழுப்பிய அந்த மாணவிகள், தங்களை சமாதானப்படுத்த முயன்ற பள்ளி முதல்வர் முன்னிலையில், ‘சர்வாதிகாரி சாகடிக்கப்பட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பினர். அந்தக் காணொலியின் உண்மைத் தன்மையை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் உறுதிசெய்தது.
இந்நிலையில், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஷிராஜ் எனும் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள், ஹிஜாபைக் கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட காணொலி வைரலாகிவருகிறது. இதில் ‘பஸிஜ் ஒழிக’ எனும் முழக்கம் பிரதானமாக ஒலித்தது. ’பஸிஜ்’ என அழைக்கப்படும் துணை ராணுவப் படைதான் மக்களின் சமீபத்திய போராட்டங்களை வன்முறை மூலம் முடக்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் முன்னிலையிலேயே மாணவிகள் இவ்வாறு முழக்கமிட்டிருக்கின்றனர். ‘சுதந்திரம்’, ‘சுதந்திரம்’ என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
இந்தக் காணொலியின் உண்மைத் தன்மை குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தால் உறுதிசெய்ய முடியவில்லை. எனினும், சமூகவலைதளங்களில் பலரும் இந்தக் காணொலியைப் பகிர்ந்துவருகின்றனர்.