மக்களிடம் மன்னிப்பு கேட்ட தென் கொரிய ராணுவம்: என்ன நடந்தது?

By காமதேனு

தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பகை உலகப் பிரசித்தம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தென் கொரியாவுக்கு அமெரிக்காவும் வட கொரியாவுக்கு சோவியத் ஒன்றியமும் ஆதரவளித்துவந்தன. இன்றைய தேதியில் வட கொரியாவை ரஷ்யா வலுவாக ஆதரிக்கிறதோ இல்லையோ, தென் கொரியாவுக்குத் தொடர்ந்து துணை நிற்கிறது அமெரிக்கா. வட கொரியாவிடமிருந்து பாதுகாக்க தென் கொரியாவில் 28,500 துருப்புகளை அமெரிக்கா நிறுத்தியிருக்கிறது.

கடந்த வாரம் தென் கொரியாவுக்குச் சென்றிருந்த அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டின் பாதுகாப்புக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தார். வட கொரியா அவ்வப்போது அணுகுண்டு மிரட்டல் விடுத்தாலோ, ஏவுகணை சோதனை நடத்தினாலோ தென் கொரியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அமெரிக்கா, தென் கொரிய ராணுவத்துடன் இணைந்து அவ்வப்போது போர் ஒத்திகையிலும் ஈடுபடும்.

அப்படித்தான் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வட கொரியாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ராணுவ ஒத்திகையில் தென் கொரியா ஈடுபட்டது. இரு நாடுகளும் தங்கள் ஒற்றுமையின் வலிமையைக் காட்டவே இதைச் செய்தன. ஆனால், அதன் மூலம் ஏற்பட்ட விபரீதம்தான் தென் கொரியாவையே அதிர வைத்துவிட்டது!

பின்னணி என்ன?

ஜப்பான் வடக்குப் பகுதியில் இடைநிலை ஏவுகணைச் சோதனையை வட கொரியா நேற்று காலை நடத்தியது. கடந்த 10 நாட்களில் வட கொரியா நடத்திய ஐந்தாவது சோதனை இது. வட கொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபர் 16-ல் நடக்கவிருக்கிறது. இதையடுத்து மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தயாராகிவருவதாகத் தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறிவருகின்றனர். இதற்கு முன்னோட்டமாகவே இந்த ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்றைய வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்குப் பதிலடி தரும் வகையில் அமெரிக்கா, தென் கொரிய ராணுவங்கள் ராணுவ ஒத்திகை நடத்தின. பசிபிக் பெருங்கடலில், கிழக்குக் கடல் என்றும் ஜப்பானின் கடல் என்றும் அழைக்கப்படும் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது, தென் கொரியா ஏவிய ஹய்மூ-2 எனும் ஏவுகணை தவறுதலாக தென் கொரிய கடற்கரை நகரமான காங்நெங் நகரின் அருகே உள்ள ஒரு விமானப் படைத் தளத்தின் மைதானத்தில் விழுந்தது.

நல்லவேளையாக அந்த ஏவுகணை வெடிக்கவில்லை. ஆனால், பலமாக எழுந்த சத்தமும், ஏவுகணையால் ஏற்பட்ட தீயும் அப்பகுதி மக்களை அச்சுறுத்திவிட்டது. குறிப்பாக, வட கொரியாதான் தங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று அவர்கள் அச்சமடைந்தனர். அந்தப் பகுதியில் ஆரஞ்சு வண்ணத்தில் தீப்பிழம்புகள் எழும் காட்சிகள் அடங்கிய காணொலிகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன. இதனால் தென் கொரியா முழுவதும் பதற்றம் பரவியது.

இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தென் கொரிய ராணுவம் கூறியிருக்கிறது. கூடவே, தென் கொரிய மக்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE