ஜெர்மனியில் ஒரே ஆண்டில் கிடுகிடுவென உயர்ந்த மக்கள்தொகை: என்ன காரணம் தெரியுமா?

By காமதேனு

ஜெர்மனியின் மக்கள்தொகை இந்த ஆண்டு 84 மில்லியனை எட்டியுள்ளது. முக்கியமாக உக்ரைன் அகதிகளின் வருகையால் இந்த ஆண்டு மக்கள்தொகை உயர்ந்துள்ளதாக ஜெர்மன் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2022ம் ஆண்டின் முதல் பாதியில் உக்ரைனில் இருந்து 7,50,000 பேர் ஜெர்மனிக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. "ரஷ்ய தொடுத்துள்ள போரின் விளைவாக உக்ரைனில் இருந்து அகதிகள் வருவதே தற்போதைய மக்கள்தொகை வளர்ச்சிக்கான தீர்க்கமான காரணி" என்று இந்த அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனின் அகதிகள் வருகை அதிகரிப்பு காரணமாக ஜெர்மனியின் மக்கள்தொகை 8,43,000 பேர் அதாவது 1% ஆண்டின் முதல் பாதியில் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனியில் மக்கள் தொகை 2021 ல் வெறும் 82,000 பேர் அதாவது 0.1% மட்டுமே அதிகரித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான ஜெர்மனியில் 1990 முதல் இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே வளர்ச்சியைக் கண்டுள்ளது. 1992 ம் ஆண்டில் யூகோஸ்லாவியாவில் நடந்த போரின் காரணமாக அந்த ஆண்டு மக்கள் தொகை 7 லட்சம் அதிகரித்தது. அதன்பின்னர் 2015ம் ஆண்டில், மத்திய கிழக்கில் நடந்த போர்களின் காரணமாக 1 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் ஜெர்மனிக்கு வந்தனர்.

புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்களின்படி, இந்த ஒரு ஆண்டில் ஜெர்மனியின் பெண் மக்கள்தொகை 1.2% அதிகரித்துள்ளது. ஆண் மக்கள்தொகை 0.8% அதிகரித்துள்ளது. உக்ரைனில் சண்டையிடக்கூடிய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாததால், அதிகமான பெண்களும் குழந்தைகளும் உக்ரைனில் போரிலிருந்து தப்பி சென்றுவிட்டனர் என்பதே இதன் பொருள்.

அகதிகளின் வருகைக்கு முன்பே, தொழிலாளர் தேவை அதிகரித்ததால், புலம்பெயர்ந்தோருக்கு மிகவும் ஏற்ற இடமாக ஜெர்மனி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளது. மேலும், ஜெர்மனியில் குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களே உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE