ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு அரசுமுறை இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்நிகழ்வில் 4,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஜப்பானில் நீண்டகாலம் பிரதமர் பதவிவகித்தவர் எனும் பெருமை கொண்டவர் ஷின்ஸோ அபே. ஜப்பான் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த அவர், வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவிவகித்த தனது தந்தையின் உதவியாளராக, 1982-ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2006-ல் முதன்முறையாக ஜப்பான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 8-ல், ஜப்பானின் நரா நகரில், யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் முன்னே தேர்தல் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த ஷின்ஸோ அபே, ஜப்பானிய கடற்படையின் தற்காப்புப் படையின் முன்னாள் வீரர் டெட்ஸுயா யமாகாமியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
ஜூலை 12-ம் தேதி அவரது இறுதிச் சடங்கு தனிப்பட்ட முறையில் அவரது குடும்பம் நடத்தியது. அதைத் தொடர்ந்து, அவருக்கு அரசு முறையில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்தார். ஆனால், ஷின்ஸோ அபேயின் ராணுவக் கொள்கை, தென் கொரியாவை மையமாகக் கொண்ட யுனிஃபிகேஷன் தேவாலயத்துடனான அவரது தொடர்பு (சர்ச்சைக்குரிய இந்த தேவாலயத்துக்கு ஆதரவாக இருந்தார் எனும் காரணத்துக்காகவே அவரைப் படுகொலை செய்ததாக டெட்ஸுயா யமாகாமி வாக்குமூலம் அளித்திருந்தார்) என அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் உண்டு. இதனாலேயே, அவருக்கு அரசுமுறை இறுதி அஞ்சலி நடத்தக் கூடாது எனப் பலரும் போராட்டம் நடத்தினர்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் - திட்டமிட்டபடி இன்று ஷின்ஸோ அபேவுக்கு அரசுமுறை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைநகர் டோக்கியோவில் உள்ள நிப்பான் புடோகான் கட்டிடத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 19 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உள்ளிட்ட 4,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஷின்ஸோ அபே படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜப்பானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்பைவிட கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடந்த இடத்தைச் சுற்றி 1,000-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்டித்து டோக்கியோவில் இன்றும் போராட்டங்கள் நடந்தன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் டோக்கியோவுக்கு வந்திருந்தேன். அப்போது முன்னாள் பிரதமர் அபேயின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக மீண்டும் டோக்கியோவுக்கு வருவேன் எனக் கற்பனை செய்தே பார்க்கவில்லை. அவர் ஒரு சிறந்த தலைவர். இந்தியா - ஜப்பான் உறவில் நம்பிக்கை வைத்திருந்தவர். மில்லியன்கணக்கான நெஞ்சங்களில் அவர் வாழ்வார்!’ என்று ட்விட்டரில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.