ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு அந்நாட்டின் அரசு சார்பில் நாளை இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஷின்ஸோ அபே படுகொலைக்குப் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் நிலையில் நடக்கும் முதல் முக்கிய நிகழ்வு என்பதால் கூடுதல் கவனம் ஈர்த்திருக்கிறது இந்த இறுதி அஞ்சலி.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே(67), ஜூலை 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப் படுகொலை செய்த முன்னாள் கடற்படை வீரர் டெட்ஸுயா யமாகாமி, சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டார். தென் கொரியப் பின்னணி கொண்ட தேவாலயம் ஒன்றுக்குத் தனது தாய் அதிக அளவில் நன்கொடை கொடுத்ததால், அவரது குடும்பம் திவாலானதாக விசாரணையில் டெட்ஸுயா யமாகாமி தெரிவித்திருந்தார். அந்த தேவாலயத்துடன் ஷின்ஸோ அபே தொடர்பில் இருந்ததால் அவரைச் சுட்டுக்கொன்றதாகவும் கூறியிருந்தார்.
ஜூலை 12-ம் தேதி ஷின்ஸோ அபேயின் இறுதிச்சடங்கை அவரது குடும்பம் தனிப்பட்ட முறையில் நடத்தியது. டோக்கியோவில் உள்ள ஸோஜோஜி பவுத்த ஆலயத்தில் நடந்த இந்த இறுதிச்சடங்கில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதற்கிடையே, ஷின்ஸோ அபே மரணமடைந்து 6 நாட்களுக்குப் பின்னர், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அரசு முறையில் அவருக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்தார். எனினும், இதைப் பெரும்பாலான ஜப்பானியர்கள் ரசிக்கவில்லை. ஷின்ஸோ அபேயின் படுகொலைக்குக் காரணமாக அமைந்துவிட்ட தென் கொரிய தேவாலயத் தொடர்பும் அவர் மீதான அதிருப்தியை அதிகரித்திருக்கிறது. அந்த தேவாலயம் பெருமளவில் நிதி திரட்டுவது, தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொள்வது எனப் பல்வேறு புகார்களுக்குள்ளானது. அந்த தேவாலயத்தின் மீது பல வழக்குகளும் உள்ளன.
ஷின்ஸோ அபேயின் படுகொலைக்குக் காரணமாக அமைந்துவிட்ட தென் கொரிய தேவாலயத் தொடர்பும் அவர் மீதான அதிருப்தியை அதிகரித்திருக்கிறது. ஜப்பானில் இயங்கிவரும் அந்த தேவாலயம் பெருமளவில் நிதி திரட்டுவது, தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொள்வது எனப் பல்வேறு புகார்களுக்குள்ளானது. அந்த தேவாலயத்தின் மீது பல வழக்குகளும் உள்ளன.
இந்தச் சூழலில், 97 கோடி ரூபாய் செலவில் அவருக்கு அரசு முறை இறுதி அஞ்சலி அவசியமா என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வி. அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன.
அத்துடன், ஷின்ஸோ அபே படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜப்பானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்பைவிட கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை ஒட்டி, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மோப்ப நாய்கள் சகிதம் கடும் சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தலைநகர் டோக்கியோவில் உள்ள நிப்பான் புடோகான் கட்டிடத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இதில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஷின்ஸோ அபே குறித்து நினைவு உரையாற்றுவார். ஜப்பான் நாடாளுமன்ற சபாநாயகர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்நிகழ்வில், ஜப்பான் அரச வம்சத்தின் சார்பில் பட்டத்து இளவரசர் அகிஷினோ, பட்டத்து இளவரசி கிகோ ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மேலும், பிரதமர் மோடி, அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், அந்நாட்டின் முன்னாள் பிரதமர்கள் மூன்று பேர், சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியென் லோங், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் உள்ளிட்ட 4,300 பேர் கலந்துகொள்கிறார்கள்.