சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சீன இராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
சீன அதிபர் ஜின்பிங் சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார், அங்கு அவர் பல நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2020ல் எல்லை மோதல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் நேருக்கு நேர் சந்தித்தார். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய ஜின்பிங்கை ராணுவம் வீட்டுக்காவலில் வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சீனாவின் மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங்க் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “செப்டம்பர் 22ம் தேதி சீன ராணுவ வாகனங்கள் பீஜிங் நகருக்கு அருகே உள்ள ஹுவான்லாய் முதல் ஷாங்கியோகோவ் வரையில் சுமார் 80 கி.மீ தொலைவுக்கு அணிவகுத்து நிற்கின்றன. இதற்கிடையே ஜின்பிங்கை சீன ராணுவத்தின் தலைவர் பதவியிலிருந்து கம்யூனிஸ்ட் தலைவர் நீக்கயதால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என வதந்தி பரவி வருகிறது” என தெரிவித்துள்ளார். மேலும், நேற்று முன்தினம் சீனாவில் 6 ஆயிரம் உள்நாட்டு, சர்வதேச விமானங்களின் சேவை ,மற்றும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்று சீன அரசின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
இந்த வார தொடக்கத்தில் ஊழல் வழக்கில் சீனாவின் இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதித்ததை அடுத்து, ஜின்பிங்க் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவியுள்ளது. 2012 முதல் சீன அதிபராக உள்ள ஜின்பிங் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், புதிய அதிபராக ராணுவ தளபதி லி கியாமிங் பதவியேற்பார் எனவும் தகவல் பரவி வருகிறது.