பதவி உயர்வு வழங்காத மேலதிகாரியின் குடும்பத்தைக் கொன்ற சீனர்: 8 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் கைது!

By காமதேனு

அமெரிக்காவில், பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்யவில்லை எனும் கோபத்தில் தனது மேலதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் கொன்ற சீனர் ஒருவர், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில், ஃபாங் லூ என்பவர் வேலை செய்துவந்தார். அவர் தனது மேலதிகாரியான மாயோ சன் என்பவர் தனது பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்யவில்லை என அதிருப்தியடைந்தார்.

அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்குத் தன்னைப் பணி மாறுதல் செய்ய வேண்டும் என ஃபாங் லூ விரும்பியதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு மாயோ சன் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. அத்துடன், அன்றைய தினம் அலுவலகம் சென்றபோது தனது சக ஊழியர்கள் தன்னிடம் வித்தியாசமாக நடந்துகொண்டதாக ஃபாங் லூ உணர்ந்தார். மாயோ சன் தன்னைப் பற்றி இழிவாக ஏதோ பேசியதாகவும் சந்தேகமடைந்தார். இந்தக் காரணங்களால் தனக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று அவர் கருதினார்.

இந்தச் சூழலில், 2014 ஜனவரி 30-ல், மாயோ சன் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் என நால்வரும் தத்தமது படுக்கை அறைகளில் துப்பாக்கி குண்டு காயத்துடன் இறந்துகிடந்தனர்.

சந்தேகத்தின் பேரில் ஃபாங் லூவைப் பிடித்து போலீஸார் விசாரித்துவந்தனர். சம்பவம் நடந்த அன்று மாயோ சன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கைப்பை உள்ளிட்ட சான்றுகளில் செய்யப்பட்ட தடயவியல் பரிசோதனை முடிவுகள் மூலம், ஃபாங் லூ தான் குற்றவாளி எனத் தெரியவந்தது. எனினும், ஆய்வு முடிவுகள் வருவதற்கு முன்பே அவர் தனது தாய்நாடான சீனாவுக்குத் திரும்பிவிட்டார். முன்னதாக, தான் மாயோ சன் மீது கோபத்தில் இருந்தது உண்மைதான் என்றாலும், இந்தப் படுகொலையைச் செய்தது தான் அல்ல என்று கூறியிருந்தார்.

தடயவியல் ஆய்வுகளின்படி அவர்தான் குற்றவாளி எனத் தெரிந்தும், அவர் சீனாவுக்குச் சென்றுவிட்டதால் அவரைக் கைதுசெய்வது அமெரிக்க போலீஸாருக்குச் சாத்தியமில்லாமல் போயிற்று.

இந்தச் சூழலில்தான், செப்டம்பர் 11-ம் தேதி அவர் அமெரிக்காவுக்குத் திரும்பினார். கலிபோர்னியா விமான நிலையத்துக்கு வந்த அவரை போலீஸார் கைதுசெய்தனர். இதன் மூலம், 8 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மேலதிகாரியின் குடும்பத்தைக் கொன்றவர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE