முறையாக ஹிஜாப் அணியாத காரணத்தால் கைதுசெய்யப்பட்ட இளம் பெண் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்த சம்பவம், ஈரான் நாட்டுப் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில் பெண்களின் அடிப்படை உரிமைகளை போலீஸார் நசுக்குவதாகக் கூறி ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாபைக் கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மஹஸா ஆமினி (22) எனும் பெண், தனது குடும்பத்தினருடன் தலைநகர் டெஹ்ரானுக்குச் சமீபத்தில் சென்றிருந்தார். அப்போது அவர் ஹிஜாபை சரியாக அணியவில்லை எனக் கூறி, அந்நகர போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். ‘அறநெறிக் காவலர்கள்’ எனும் பெயரில், ஹிஜாப் முறையாக அணியப்படுகிறதா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் வேலையை அந்தப் பிரிவு போலீஸார் செய்துவருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (செப்.13) கைதுசெய்யப்பட்ட அவர் பின்னர், கோமா நிலைக்குச் சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கைதுசெய்யப்பட்ட பின்னர் அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும், அவரது தலையில் பலமாக அடிபட்டதால்தான் அவர் கோமா நிலைக்குச் சென்றதாகவும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, போலீஸ் வேனில் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் தாக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். எனினும் டெஹ்ரான் போலீஸார் அதை மறுத்தனர்.
அவரது மரணம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.
ஈரானில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த ஜூலை மாதம், செப்டே ராஷ்னோ எனும் பெண் டெஹ்ரானில் பேருந்தில் சென்றபோது முறையாக ஹிஜாப் அணியாமல் இருந்ததாக மற்றொரு பெண் அவர் மீது குற்றம்சாட்டினார். இதையடுத்து புரட்சிகரக் காவலர்களால் கைதுசெய்யப்பட்ட செப்டே ராஷ்னோ, ஆகஸ்ட் மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இப்படியான சம்பவங்களால் அதிருப்தியடைந்திருக்கும் பெண்கள், மஹஸா ஆமினியின் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவருகின்றனர்.
இந்நிலையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சாகேஸில் நேற்று நடந்த இறுதிச்சடங்கின்போது ஏராளமான பெண்கள் தங்கள் ஹிஜாபைக் கழற்றி வீசினர், மேலும், ‘சர்வாதிகாரிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என்று பலர் முழக்கமிட்டனர். அந்தக் காணொலி தற்போது சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுவது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் அடக்குமுறையை ஏவியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.