நிலச்சரிவில் சிக்கி மாயமான 2 பேருந்துகள்; 65 பயணிகளின் கதி என்ன?

By KU BUREAU

நேபாள் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் திடீர் நிலச்சரிவுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிட்வான் மாவட்டத்தில் திருசூலி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை இவ்வழியாக காத்மண்டு நோக்கி இரண்டு பேருந்துகள் நாராயணன்காட்-முக்லிங் சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஒரு பேருந்தில் 24 பேரும், மற்றொரு பேருந்தில் 41 பேரும் என 65 பயணிகள் இந்த பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பேருந்துகளும் அடித்து செல்லப்பட்டு, ஆற்றில் கவிழ்ந்தன. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று பயணிகள் மற்றும் பேருந்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால், மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள நேபாள் பிரதமர் புஷ்பா கமல் தஹல், அனைத்து துறை அதிகாரிகளையும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE