‘மோடி சிறந்த நபர்; அற்புதமாகப் பணிபுரிகிறார்’ - நற்சான்றிதழ் கொடுக்கும் ட்ரம்ப்!

By காமதேனு

“பிரதமர் மோடிக்குக் கிடைத்திருக்கும் பணி அத்தனை எளிதானது அல்ல. அவர் ஒரு சிறந்த நபர். அற்புதமாகப் பணிபுரிகிறார்” என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகியிருக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுவாரா எனும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், இந்தியாவின் பிரதான ஊடகங்களில் ஒன்றான என்டிடிவி செய்தி சேனலுக்குப் பிரத்யேகப் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியிருக்கும் அவர், பிரதமர் மோடி குறித்தும் சில கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில், ‘முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோரைவிடவும், இந்தியாவுடனான உறவைச் சிறப்பாகப் பேணியதாக நினைக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “என்னைப் பொறுத்தவரை நான் தான் இந்தியாவுடனான உறவைச் சிறந்த முறையில் பேணிய அதிபர். பிரதமர் மோடியிடம் இதைக் கேளுங்கள். என்னைவிட வேறு எந்த அதிபருடனும் நீங்கள் (இந்தியா) சிறப்பான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றே கருதுகிறேன்” என்று கூறினார்.

மேலும், “இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் நல்ல உறவு எனக்கு இருந்தது. மோடியும் நானும் நண்பர்கள். அவர் சிறந்த நபர். அற்புதமாகப் பணியாற்றுகிறார். அவருக்குக் கிடைத்திருக்கும் பணி அத்தனை எளிதானது அல்ல. இருவரும் நீண்ட காலமாகவே ஒருவரையொருவர் அறிந்துவைத்திருக்கிறோம். நல்ல மனிதர் அவர்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா எனும் கேள்விக்கு, “நான் போட்டியிட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். விரைவில் அதுகுறித்து முடிவெடுப்பேன்” என்றார் ட்ரம்ப்.

ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில், 2019 செப்டம்பரில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடந்த ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ட்ரம்ப் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான கலந்துகொண்டனர். அதில் பேசிய மோடி, ‘அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ என்று உற்சாகத்துடன் கூறியது பேசுபொருளானது. பின்னர், இந்தியாவுக்கு வந்த ட்ரம்ப் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்றிருந்தபோது அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE