கனடாவில் தொடர் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு சகோதரர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கனடா நாட்டின் சஸ்காட்சிவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பகுதியிலும் சஸ்காதூன் பகுதியில் உள்ள வெல்டன் கிராமத்திலும் உள்ள 13 இடங்களில் பூர்வகுடி மக்களைக் குறிவைத்து இருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தாக்குதலை நடத்தியவர்கள் டேமியன் ஆண்டர்ஸன் (31) மற்றும் அவரது தம்பி மைல்ஸ் ஆண்டர்ஸன் (30) என விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பகுதியில் ஒரு வீட்டின் அருகே புற்கள் நிறைந்த பகுதியில் டேமியன் சாண்டர்ஸன் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காயங்களைப் பார்க்கும்போது அவை அவரே தனக்கு ஏற்படுத்திக்கொண்டவையாகத் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
டேமியனின் தம்பி மைல்ஸ் ஆண்டர்ஸன் ரெஜினாவில் எங்கேனும் ஓர் இடத்தில் பதுங்கியிருக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கும் போலீஸார் அவருக்கும் உடலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். காயமடைந்திருந்தாலும் அவர் ஆபத்தானவர் என்பதால் அந்தப் பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு போலீஸார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ஒரு காரைத் திருடிக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றதாகவும் சஸ்காட்சிவான் மாகாணத் தலைநகரான ரெஜினாவில் இருவரும் தென்பட்டதாகவும், முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களது அங்க அடையாளங்களுடன் கறுப்பு நிற நிசான் ரோக் காரில் ரெஜினாவில் இருவர் காணப்பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலேயே டேமியன் சாண்டர்ஸன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருப்பது விசாரணையின் கோணத்தை மாற்றியிருக்கிறது.