கனடா நாட்டில் நேற்று நடந்த இருவேறு கத்திக்குத்து சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
கனடா நாட்டின் சஸ்காட்சிவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பகுதியிலும் சஸ்காதூன் பகுதியில் உள்ள வெல்டன் கிராமத்திலும் இந்தச் சம்பவங்கள் நடந்ததாக அந்நாட்டுக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
சிலர் குறிவைத்துத் தாக்கப்பட்டதாகக் கூறியிருக்கும் போலீஸார், பலர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடந்ததாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இரு பகுதிகளிலும் மொத்தம் 13 இடங்களில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாக சஸ்காட்சிவான் மாகாண காவல் துறையின் துணை ஆணையர் ரோண்டா பிளாக்மோர் தெரிவித்திருக்கிறார்.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கொண்டுசெல்லப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகத்துக்குரியவர்களாக, 31 வயதான டேமியன் சாண்டர்ஸன், 30 வயதான மைல்ஸ் சாண்டர்ஸன் ஆகிய இருவரின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
இருவரும் கறுப்பு நிற தலைமுடி, பழுப்பு நிறக் கண்கள் கொண்டவர்கள் என்றும், இருவரும் கறுப்பு நிற நிஸான் ரோக் காரைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர். இந்தப் படுகொலைகளுக்கான பின்னணி என்ன என்று இதுவரை தெரியவில்லை.
சஸ்காட்சிவான் மாகாணத் தலைநகரான ரெஜினாவில் இருவரும் கடைசியாகத் தென்பட்டதாகக் கூறியிருக்கும் போலீஸார், அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அவர்களைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.