இலங்கையின் இறையாண்மையில் தலையிடுகிறதா இந்தியா?

By காமதேனு

சீன விண்வெளி ஆய்வு மற்றும் உளவுக் கப்பல் இலங்கைக்கு வந்துசென்ற விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்புகளை விமர்சிக்கும் செய்யும் விதத்திலும், இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிடுவதாகவும் ட்வீட் செய்த இலங்கைக்கான சீனத் தூதருக்கு இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

சீனாவின் ‘யுவான் வாங்’ வரிசையைச் சேர்ந்த ‘யுவான் வாங் 5’ கப்பல் அதி நவீன சாதனங்களைக் கொண்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஹைடெக் ரேடியோ ஆன்டெனா, ரேடார் போன்ற கருவிகள் மூலம் எந்தச் செயற்கைக்கோளையும் கண்காணிக்க முடியும். இந்தக் கப்பல், ஆகஸ்ட் 16-ம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டைக்கு வந்து எரிபொருள் நிரப்பி, உணவு, ஓய்வு உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

முன்னதாக, இந்தியாவின் பெரும்பாலான விண்வெளித் திட்டங்கள், ஏவுதளங்கள் தென்னிந்தியாவில் இருப்பதால், உளவுக் கப்பலான யுவான் வாங் 5-ன் வருகைக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதுதொடர்பாக இலங்கையிடம் இந்திய வெளியுறவுத் துறை பேசியிருந்தது. இந்தியாவின் ஆட்சேபத்தை சீனாவிடம் இலங்கை பகிர்ந்துகொண்டது. எனினும், இலங்கை அதிகாரிகளிடம் சீன அதிகாரிகள் தொடர்ந்து பேசி, சம்மதம் பெற்றனர். கூடவே, ‘பாதுகாப்பு காரணங்கள் எனும் பெயரில் இலங்கைக்குச் சில நாடுகள் அழுத்தம் கொடுப்பது முற்றிலும் நியாயமற்றது’ எனச் சீனா ஆட்சேபம் தெரிவித்தது.

அதேசமயம், ஆகஸ்ட் 11-ம் தேதியே வந்திருக்க வேண்டிய கப்பல், இந்தியா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, 5 நாட்கள் தாமதமாகி 16-ம் தேதி இலங்கைக்கு வந்தது.

முன்னதாக இதுதொடர்பாகப் பேசிய இலங்கைக்கான சீனத் தூதர் சி ஸென்ஹாங், “இதில் எந்த விசேஷமும் இல்லை. இதுபோன்ற கப்பல்கள் இலங்கைக்கு வந்துசெல்வது இது முதல் முறை அல்ல” என்று கூறியிருந்தார். இந்தியா முன்வைத்த ஆட்சேபம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதெல்லாம் எனக்குத் தெரியாது. வாழ்க்கையென்றால் அப்படித்தானே இருக்கும்!” எனச் சற்று கிண்டலாகப் பேசியிருந்தார்.

தற்போது, ‘யுவான் வாங் 5’ கப்பல் புறப்பட்டுச் சென்றுவிட்ட நிலையில் இந்தியாவைச் சீண்டும் வகையில், சீனத் தூதர் சி ஸென்ஹாங், ’குறிப்பிட்ட சில சக்திகள் எந்த ஆதாரமும் இல்லாமல், பாதுகாப்பு குறித்த கவலை எனும் பெயரில், வெளியிலிருந்து இடையூறு செய்தன. இது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் செய்யப்பட்ட தலையீடு’ என ட்வீட் செய்திருந்தார்.

இதுதொடர்பாக, வெள்ளிக்கிழமை எழுதிய கட்டுரையில், ‘இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் எந்தவிதமான மீறல் நடந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றும் மிரட்டும் தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதரகம் இதை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ‘சீனத் தூதரின் கருத்துகளைக் கவனித்தோம். அடிப்படை ராஜதந்திர நெறிமுறையை அவர் மீறியிருப்பது ஒருவேளை அவரது தனிப்பட்ட குணமாக இருக்கலாம் அல்லது அந்நாட்டின் ஒட்டுமொத்த மனப்பான்மையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்’ என்று இந்தியத் தூதரகம் ட்வீட் செய்திருக்கிறது.

‘இலங்கைக்கு உதவிதான் தேவை - இன்னொரு நாட்டின் திட்டத்துக்கு உதவும் வகையிலான அநாவசியமான அழுத்தமோ தேவையற்ற சர்ச்சையோ அல்ல!’ என்றும் இந்தியா அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE