வியத்தகு வியாழன்: விண்வெளி தொலைநோக்கி பதிவுசெய்த அரிய படங்கள்!

By காமதேனு

சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோளான வியாழன் கோளின் புதிய படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டிருக்கிறது. நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்திருக்கும் இந்தப் படங்கள் வியாழன் கோளை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றன. ஜூலை மாதம் எடுக்க்கப்பட்ட இந்தப் படங்கள் வியாழன் கோளின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் துருவ ஒளியை மிக நேர்த்தியுடன் பதிவுசெய்திருக்கின்றன.

ஒரு படத்தில் வியாழன் கிரகத்தைச் சுற்றியிருக்கும் வளையம் அழகாகப் பதிவாகியிருக்கிறது. அதன் பின்னணியில் நட்சத்திர மண்டலம் ஜொலிக்க அதன் இரண்டு நிலவுகளும் காட்சியளிக்கின்றன. வியாழன் கோளில் வீசும் புயல் காற்றும் இந்தப் படங்களில் பதிவாகியிருக்கிறது. அந்தக் கோளின் மூடுபனியும் படமாக்கப்பட்டிருக்கிறது. அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்கள் நீலம், வெள்ளை, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களைப் பயன்படுத்தி அழகூட்டப்பட்டிருக்கின்றன.

வானியலாளரும் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியருமான இம்கே டெ பாடெர், பாரிஸ் நகரத்தில் உள்ள வானியல் மையத்தைச் சேர்ந்த தியெர்ரி ஃபவுசெட் ஆகிய இருவரும் இணைந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் இந்தப் படங்களை எடுத்திருகின்றனர்.

“இந்தப் படங்கள் இத்தனை சிறப்பாக வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” இம்கே டெ பாடெர் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE