சிங்கப்பூரில் ஆண் தன்பாலின உறவாளர்களைத் தண்டிக்கும் சட்டப்பிரிவு 377ஏ, காலனிய காலத்திலிருந்து தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, ஆணும் ஆணும் உறவு கொண்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், இந்தச் சட்டப்பிரிவை நீக்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.
இந்தச் சட்டம் தொடரும் என 15 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் அரசு உறுதியாகத் தெரிவித்திருந்தது. எனினும், இச்சட்டம் மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்தப்படுவது குறைந்திருந்தது. அதேசமயம், இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என தன்பாலின உறவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர். மாறிவரும் நவீன கலாச்சாரத்துக்கு முரணாக இந்தச் சட்டம் இருப்பதாக அவர்கள் விமர்சித்தனர். இதுதொடர்பாக சட்டரீதியாக அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின.
இந்நிலையில், இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லோங் நேற்று அறிவித்தார். “377 ஏ சட்டப்பிரிவை அரசு ரத்து செய்கிறது. ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான உடலுறவைக் குற்றச்செயல் என இனி கருதப்படாது. இது சரியான நடவடிக்கை என்றே கருதுகிறேன். பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம், 377ஏ சட்டப்பிரிவு நீக்கப்படுவதன் மூலம், தன்பாலின உறவாளர்கள் திருமணம் செய்துகொள்ள முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைத்துவிடாது என்பது குறிப்பிடத்தக்கது.