‘சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதற்கு அவரும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம்!’

By காமதேனு

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, அவரையும் அவரது ஆதரவாளர்களையும்தான் குற்றம்சாட்ட வேண்டும் என்றும், இதுதொடர்பாக தங்கள் மீது குற்றம்சாட்ட ஒருவருக்கும் உரிமை இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகனான சல்மான் ருஷ்டி எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ (1988) நாவல், முகமது நபியை அவதூறு செய்யும் வகையில் எழுதப்பட்டதாக இஸ்லாமிய மதகுருக்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த நாவலுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்தன.

ஈரானின் அப்போதைய உயர் தலைவரான அயதுல்லா ருஹோல்லா கோமேனி, சல்மான் ருஷ்டிக்கு எதிராக ‘ஃபத்வா’ அறிவித்தார். அவரது தலைக்கு 2.8 மில்லியன் டாலர் விலை அறிவிக்கப்பட்டது. அந்த நாவலுடன் தொடர்புடைய அனைவரையும் கொல்ல வேண்டும் என்று இஸ்லாமிய சமூகத்தினருக்கு அயதுல்லா ருஹோல்லா கோமேனி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அந்நாவலைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்தவர்களும், வெளியிட்டவர்களும் தாக்குதலுக்குள்ளாகினர். குறிப்பாக, ஜப்பானிய மொழியில் அந்நாவலை மொழிபெயர்த்த ஹிடோஷி இகராஷி எனும் பேராசிரியர், மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டார்.

பல்வேறு நாடுகளில் தலைமறைவாக இருந்த சல்மான் ருஷ்டி, 2016-ல் அமெரிக்காவின் குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கத் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக, சற்று சுதந்திரமாக உலவிவந்தார். இந்தச் சூழலில்தான், நியூயார்க் நகரில் உள்ள சடாகுவா கல்வி மையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.12) கலை வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றாவிருந்த சல்மான் ருஷ்டியை, ஹாதி மட்டார் (24) எனும் இளைஞர் கத்தியால் பல முறை குத்தினார். இதில் படுகாயமடைந்த சல்மான் ருஷ்டி, பென்சில்வேனியாவில் உள்ள எரீ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலில், இதுகுறித்து முதல் முறையாகக் கருத்து தெரிவித்திருக்கிறது ஈரான் அரசு. தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நாஸர் கனானி, “சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு, அவரையும் அவரது ஆதரவாளர்களையும்தான் தவிர வேறு யாரையும் பழி சொல்லவோ, கண்டிக்கவோ முடியாது. இது தொடர்பாக ஈரான் மீது குற்றம்சாட்ட யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறினார். கருத்துச் சுதந்திரம் எனும் பெயரில் மதத்துக்கு எதிராக சல்மான் ருஷ்டி செய்த அவதூறை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இஸ்லாமியப் புனிதங்களை அவமதித்ததன் மூலம் சல்மான் ருஷ்டி, தானாகவே 1.5 பில்லியன் முஸ்லிம்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்” என்று தெரிவித்த நாஸர் கனானி, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர் குறித்து தங்களிடம் வேறு எந்தத் தகவலும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், ஈரானின் அரசு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக சல்மான் ருஷ்டிக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவந்தன என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்திருக்கிறார். சல்மான் ருஷ்டி மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து ஈரான் அரசு ஆதரவு ஊடகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் நேற்று அவர் குறிப்பிட்டார். ‘சாத்தான் குருடாக்கப்பட்டார்’ என்று ஈரான் அரசு ஆதரவு ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விஷயத்தில் ஈரான் தனது நிலைப்பாட்டை 1998-ல் மாற்றிக்கொண்டது. அயதுல்லா ருஹோல்லா கோமேனி பிறப்பித்த ஃபத்வாவை ஆதரிக்கவில்லை என்று அரசு அறிவித்தது. எனினும், ‘சல்மான் ருஷ்டிக்கு எதிரான ஃபத்வா உறுதியானது; மாற்ற முடியாதது’ என ஈரானின் தற்போதைய உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி 2019-ல் ட்வீட் செய்தார்.

நீதிமன்றத்தில் ஹாதி மட்டார்

ருஷ்டி மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய ஹாதி மட்டார், நியூஜெர்ஸி மாநிலத்தின் ஃபேர்வியூ பகுதியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் தெற்கு லெலபனானிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று குடியேறியவர்கள். தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறார்.

அதேசமயம், அவரது சமூகவலைதளப் பதிவுகள் அவர் ஷியா பிரிவு தீவிரவாதம் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (ஐஆர்சிசி) எனும் அமைப்பின் ஆதரவாளர் என்பதைக் காட்டுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவல் வெளியானபோது ஹாதி மட்டார் பிறக்கவே இல்லை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE