சல்மான் ருஷ்டியின் ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ (1988) நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களும், பதிப்பாளர்களும் தாக்குதலுக்குள்ளானதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அவர்களில் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் ஹிடோஷி இகராஷி, சல்மான் ருஷ்டிக்கு நிகழ்ந்தது போன்ற கத்திக்குத்துத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழ் வெளியிட்டிருக்கிறது.
ஜப்பானியப் பேராசிரியர்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஸுகுபா (Tsukuba) பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்தவர் ஹிடோஷி இகராஷி. இஸ்லாமிய கலாச்சாரம் தொடர்பாக, அப்பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்திவந்தார். அவர்தான் சல்மான் ருஷ்டியின் ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவலை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்தார்.
1990-ல் ஷின்சென்ஷா (Shinsensha) எனும் பதிப்பகம் அந்நூலை வெளியிட்டது. இதையடுத்து டோக்கியோவில் உள்ள பதிப்பகத்தின் அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டில் அந்தப் புத்தகத்தின் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். பதிப்பகத்தாருக்கும் ஹிடோஷி இகராஷிக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஹிடோஷிக்குச் சில காலம் காவலர்களின் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 1991 ஜூலை மாதம் பல்கலைக்கழக வளாகத்தில் அவரது அலுவலகத்துக்கு அருகே அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். லிப்ட் ஒன்றின் அருகில், அவரது உடல் கிடந்ததாக துப்புரவுத் தொழிலாளர் ஒருவர் தகவல் தெரிவித்ததையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். ஹிடோஷியின் முகம், கழுத்து, கைகளில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அவரது பழுப்பு நிறத் தோல் பையிலும் கத்தியால் குத்தப்பட்ட தடங்கள் இருந்தன. கொலையாளியுடன் அவர் கடுமையாகப் போராடியிருந்ததை அவை பறைச்சாற்றின. இறக்கும்போது அவருக்கு வயது 44. அவருக்கு மஸாகோ இகராஷி எனும் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். உண்மையைக் கண்டறிய மஸாகோ மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. ஹிடோஷியின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக சல்மான் ருஷ்டி இரங்கல் தெரிவித்திருந்தார்.
நீடிக்கும் மர்மம்
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அவரைக் கொலை செய்தது யார் என இறுதிவரை கண்டறியப்படவே இல்லை என்பதுதான். அந்தப் படுகொலை தொடர்பாகப் பல ஊகங்கள் வெளியாகின. கொலைக்கும் அந்தப் புத்தகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூட தகவல் வெளியானது. ஒருகட்டத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற வங்கதேச மாணவர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக, 1998-ல் ‘டெய்லி ஷின்சோ’ எனும் வார இதழ் செய்தி வெளியிட்டது. எனினும், முஸ்லிம் நாடுகளுடனான உறவில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால் அந்தக் கொலை வழக்கு அப்படியே மூடிவைக்கப்பட்டது. ஹிடோஷியைக் கொலை செய்தது யார் எனும் கேள்விக்கான விடை இன்று வரை கிடைக்கவில்லை.
பிற மொழிபெயர்ப்பாளர்கள் மீது தாக்குதல்
ஹிடோஷி மட்டுமல்லாமல், ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவலின் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
1993 ஜூலை மாதம், அந்நாவலின் முக்கிய பகுதிகளில் துருக்கிய மொழியில் மொழிபெயர்த்து உள்ளூர் நாளிதழ் ஒன்றில் வெளியிட்ட நாவலாசிரியர் ஆசிஸ் நெஸின் தாக்குதலுக்குள்ளானார். அவர் தங்கிருந்த ஹோட்டலை பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தினர். இந்தச் சம்பவம் நடந்தபோது அவருக்கு 78 வயது. தீயணைப்புத் துறையினர் அவரை ஏணி வழியே பத்திரமாக மீட்டனர். ஆனாலும், அந்த ஹோட்டலில் தங்கியிருந்த 37 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த அறிவுஜீவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் 33 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1993 அக்டோபரில் நார்வே மொழியில் அந்நூலை வெளியிட்ட பதிப்பாளர் வில்லியம் நியாகார்ட், ஓஸ்லோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையிலும் அவர் பிழைத்துக்கொண்டார். அதன் பின்னர் அப்புத்தகத்தின் மறுபதிப்பையும் வெளியிட்டார்.
இந்த வழக்கிலும் குற்றவாளி யார் என்பதை நார்வே போலீஸார் வெளியிடவே இல்லை.