‘பெருந்தொற்றுக்குப் பின்னர் முதன்முறையாக...’ - சொகுசுக் கப்பலை வரவேற்ற நியூசிலாந்து!

By காமதேனு

ஆஸ்திரேலியாவின் ‘பசிபிக் எக்ஸ்ப்ளோரர்’ சொகுசுக் கப்பல், 2,000 சுற்றுலாப் பயணிகளுடன்நியூசிலாந்தின் ஆக்லாந்து துறைமுகத்துக்கு இன்று காலை சென்று சேர்ந்தது. சிட்னியிலிருந்து வந்திருக்கும் இந்தக் கப்பல், 12 நாள் பயணமாக ஃபிஜி தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறது. கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் முதன்முறையாக சொகுசுக் கப்பல் ஒன்று அந்நாட்டுக்குச் சென்றிருக்கிறது.

கரோனா பரவலைத் தடுப்பதில் நியூசிலாந்து அரசு காட்டிய முனைப்பும், ஈட்டிய வெற்றியும் உலகப் புகழ்பெற்றவை. “நியூசிலாந்து அரசு அறிவியலுக்குச் செவிமடுத்தது. துணிச்சலுடன் செயல்பட்டது. நம்பகமான தலைமையை அந்நாடு கொண்டிருக்கிறது. நியூசிலாந்து பல உயிர்களைக் காப்பாற்றிவிட்டது. நாம் பலரை இழந்துவிட்டோம்” என அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் பெர்னி சாண்டர்ஸ் அங்கலாய்ப்புடன் பதிவுசெய்த அங்கீகாரமே அதற்குச் சான்று.

2020-ல் கரோனா பரவத் தொடங்கியவுடனேயே அப்படி மிகச் சிறப்பாகச் செயலாற்றினார் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன். முதல் வேலையாக எல்லைகளை மூடினார். பொதுமுடக்கம் அறிவித்தார். கரோனா பரிசோதனைக்கான கட்டமைப்பை வலுப்படுத்தினார். அதேசமயம், இந்நடவடிக்கைகளால் கிடைத்த வெற்றியால் அதீத சந்தோஷமடையாமல் கவனமாக இருந்தார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன்

அதுமட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளின் வரத்து பெருந்தொற்றுப் பரவலுக்கு எப்போது வேண்டுமானாலும் வழிவகுக்கலாம் என்பதால், சுற்றுலாவில் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்தார். கடந்த மே மாதம், விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அனுமதியளித்த நியூசிலாந்து அரசு, கடல் வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கான அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கடல் வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாடு அனுமதியளித்தது.

இத்தனைக்கும் நியூசிலாந்துக்கு வெளிநாடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் அந்நாட்டின் சுற்றுலாத் துறையின் பங்கு 20 சதவீதம். அந்நாட்டின் ஜிடிபியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 5 சதவீதம். எனினும், பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதே லட்சியம் என இயங்கும் ஜெஸிந்தா ஆர்டெர்ன் அரசு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் கடல் எல்லையைத் திறந்திருப்பதன் மூலம் சுற்றுலா வணிகத்தைத் தொடங்குவதற்கான முக்கியமான கட்டத்தை நெருங்கியிருப்பதாக அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்டூவர்ட் நாஷ் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம், இந்த முடிவை எடுக்க ஏன் இத்தனை நாட்கள் என சொகுசுக் கப்பல் வணிகத்தைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மறுபுறம், சொகுசுக் கப்பல்களை மீண்டும் அனுமதிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என சூழலியல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE