‘அமைதியான முறையில் தைவானை இணைக்க முயற்சிப்போம்; அது முடியாவிட்டால்...’

By காமதேனு

‘தைவான் அருகே நடத்திவந்த ராணுவ ஒத்திகைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துவிட்டோம். படைகளின் ஒருங்கிணைந்த கூட்டுப் போர் திறன்களையும் பரிசோதித்துவிட்டோம்’ என சீனா அறிவித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று சீனா வெளியிட்டிருக்கும் ’வெள்ளை அறிக்கை’ இனி என்னென்ன நடக்கலாம் என்பதற்கான சமிக்ஞையாகவும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, ஆகஸ்ட் 2-ம் தேதி தைவானுக்குச் சென்றது சீனாவைக் கோபமடையவைத்தது. தைவானைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிவரும் சீன அரசு, அவரது வருகையைக் கடுமையாகக் கண்டித்தது. தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ஏவுகணைகளை ஏவி ராணுவ ஒத்திகையிலும் ஈடுபட்டது. இந்த ராணுவ ஒத்திகை, தைவானுக்குள் ஊடுருவதற்கான முயற்சிதான் என தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனும் சூழல் உருவானது. தைவானுக்குத் துணை நிற்பதாக அமெரிக்காவும் அறிவித்தது.

தனது தைவான் பயணத்தை நியாயப்படுத்தியிருக்கும் நான்சி பெலோசி, தைவானைத் தனிமைப்படுத்த சீனா எடுக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும், தைவானுக்கு யார் செல்லலாம் / செல்லக்கூடாது என்று சீனா சொல்லக்கூடாது என்றும் என்பிசி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சூழலில், இன்று ராணுவ ஒத்திகைகளை நிறைவுசெய்துவிட்டதாக சீனா அறிவித்திருக்கிறது. ஆனால், பயிற்சிகளும் போருக்கான ஆயத்தமும் தொடரும் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து சீனா வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில், அமைதியான முறையில் தைவானின் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், படை பலத்தைப் பிரயோகிக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

‘புதிய சகாப்தத்தில் தைவான் குறித்த கேள்வி மற்றும் மீண்டும் ஒன்றிணைதல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த வெள்ளை அறிக்கையில், ‘தலைமுறை தலைமுறையாக இந்தப் பிரச்சினை தொடர அனுமதிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், அமைதியான முறையில் தைவானை சீனாவுடன் இணைக்க முயற்சி செய்வது; அது சாத்தியமாகவில்லை என்றால் போர் தொடுப்பது எனும் சீனாவின் எண்ணம் உறுதியாகத் தெரிகிறது. ஏற்கெனவே இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்த சீனா, இந்த வெள்ளை அறிக்கை மூலம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

‘பிரிவினைவாதம் தைவானைப் படுகுழியில் தள்ளிவிடும்; பேரழிவைத் தவிர வேறு எதையும் கொண்டு வராது’ என்று சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கிறது. 'கட்டாயமான சூழலில்’தான் போர் நடைபெறும் என்றும், தைவானில் உள்ள சீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும் அந்த அறிக்கையின் மூலம் தைவானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவுடன் தைவானை இணைத்தால்தான் வேறொரு நாடு அதை ஊடுருவதைத் தடுக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதுதொடர்பாக, ஆஸ்திரேலியாவில் செய்தியாளரிடம் பேசிய அந்நாட்டுக்கான சீனத் தூதர் ஷியாவ் சியான், “கட்டாயமான சூழல் எனும் பதத்துக்கு உங்கள் கற்பனைப்படி எதை வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.

ஒருவேளை தைவான் மீது சினா போர் தொடுத்து பலவந்தமாகக் கைப்பற்றினால், உய்குர் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் அங்கு வசிப்பவர்கள் மீதும் பிரயோகிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால், தைவான் மேலும் பதற்றத்துக்குள்ளாகியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE