அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்குச் சொந்தமான ரிசார்ட் இல்லத்தில் நேற்று காலை எஃப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நம்மூர் அரசியலில் நடப்பதுபோலவே, இந்தச் சோதனை குறித்த தகவல் அறிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் அவரது இல்லம் முன்பு கூடிய சம்பவமும் நடைபெற்றிருக்கிறது.
அமெரிக்காவின் 45-வது அதிபராக (2017 முதல் 2021வரை) பதவிவகித்த ட்ரம்ப், 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். எனினும், ஆரம்பம் முதலே இந்தத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவந்தார். அத்துடன், அவரது தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்வு அது.
பெரும் பணக்காரரான ட்ரம்ப் அதிபர் பதவியை இழந்ததும், ஃப்ளோரிடா மாநிலம் பாம் பீச் கவுன்ட்டியில் உள்ள மார லாகோ ரிசார்ட்டில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். அதிபராக இருந்தபோது குளிர்காலங்களில் குடும்பத்துடன் அங்கு சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால், அது குளிர்கால வெள்ளை மாளிகை என்றும் அழைக்கப்பட்டது. தற்போது தனது அரசியல் செயல்பாடுகளுக்கான மையமாகப் பயன்படுத்திவருகிறார் ட்ரம்ப்.
‘வேதனை’ ட்வீட்!
இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு சோதனைக்கான வாரன்ட்டுடன் மார லாகோ ரிசார்ட்டுக்குச் சென்ற எஃப்.பி.ஐ அதிகாரிகள், பல ஆவணங்களைக் கைப்பற்றினர். தன் இல்லத்தில் நடந்த சோதனை குறித்து ட்வீட் செய்த ட்ரம்ப், ‘ஃபுளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள அழகான எனது இல்லமான மார லாகோ தற்போது எஃப்.பி.ஐ அதிகாரிகள் அடங்கிய குழுவால் முடக்கப்பட்டிருக்கிரது; சோதனை நடத்தப்படுகிறது; ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. எனது பாதுகாப்புப் பெட்டகத்தைக்கூட அவர்கள் உடைத்துவிட்டனர்’ என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் ட்வீட் செய்வதற்கு முன்பே அங்கிருந்து எஃப்.பி.ஐ அதிகாரிகள் வெளியேறிவிட்டனர். சோதனை நடந்தபோது அவர், அங்கு இல்லை. நியூஜெர்சி மாநிலத்தின் பெட்மின்ஸ்டர் நகரில் உள்ள கோல்ஃப் கிளப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சோதனையின் பின்னணி என்ன?
தேர்தலுக்குப் பிந்தைய களேபரங்களுக்கு நடுவில், வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களில் முக்கியமான 15 பெட்டிகளை ட்ரம்ப் தனது மார லாகோ ரிசார்ட் இல்லத்துக்குக் கொண்டுசென்றுவிட்டார். அவை அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான அதி முக்கிய ஆவணங்கள். ட்ரம்ப்பின் அந்தச் செயல் சட்டவிரோதமானது. அதிபர் தொடர்பான ஆவணங்கள் சட்டம் 1978-ன்படி, வெள்ளை மாளிகையில் உள்ள ஆவணங்கள் முறையாகப் பாதுகாப்பட வேண்டும். இதை மீறுபவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை, வகித்துக்கொண்டிருக்கும் பதவியிலிருந்து தகுதியிழப்பு அல்லது எதிர்காலத்தில் போட்டியிடத் தடை என்பன உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய காப்பகங்கள் மற்றும் பதிவுகள் நிர்வாகம் (நரா) எடுத்த முயற்சிகளின் பலனாக, பல ஆவணங்களை ட்ரம்ப் திருப்பிக் கொடுத்தார். எனினும், இன்னமும் அவரிடம் பல முக்கிய ஆவணங்கள் மிச்சம் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதில் ட்ரம்ப்புக்கு முந்தைய அதிபரான ஒபாமா ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதம், ட்ரம்ப்புக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் எழுதிய கடிதங்கள், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் (அமெரிக்க அதிபருக்கான பிரத்யேக விமானம்) மாதிரி உள்ளிட்டவை அடங்கும். இவ்விவகாரத்தில் அவருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நீதித் துறை பிறப்பித்த உத்தரவின்படி இந்த ஆவணங்களை எடுக்கவே எஃப்.பி.ஐ அதிகாரிகள் அங்கு சென்றனர்.
சோதனை நடந்த தகவல் அறிந்ததும், நேற்று மாலை ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அவரது மார லாகோ ரிசார்ட்டுக்கு முன்பு குவிந்து அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டமிடுவதாக வெளியான தகவலையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. “நான் மீண்டும் தேர்தலில் நிற்பதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார். தனது ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்னர் எஃப்.பி.ஐ தலைவராக ட்ரம்ப் நியமித்த கிறிஸ்டோபர் ரே தான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ எல்லா நாடுகளின் அரசியலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது!