அழித்தொழிக்கப்பட்ட அல்-ஜவாஹிரி!

By வெ.சந்திரமோகன்

அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரியாகக் கருதப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியை ஆப்கன் மண்ணில் வைத்து அழித்தொழித்திருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.

காபூல் நகரின் ஷேர்பூர் பகுதியில் இரண்டு மாடி கொண்ட வீட்டின் பால்கனியில் அல்-ஜவாஹிரி இருந்தபோது, ட்ரோனிலிருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் துல்லியமாகச் சென்று அவரைத் தாக்கிக் கொன்றன. காபூல் நகரில் ஒரு அமெரிக்க வீரர்கூட இல்லாத நிலையில், இதைச் செய்துகாட்டியிருக்கிறது பைடன் அரசு.

2011-ல் ஒபாமா ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க நேவி சீல் படைகள் கொன்றழித்தபோது துணை அதிபராக இருந்தது ஜோ பைடன்தான். தற்போது சிஐஏ-வை வைத்து அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அல்-ஜவாஹிரியின் கதையையும் அவரே முடித்திருக்கிறார். அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவும் நிலையில், இந்த ‘ஆபரேஷன்’ மூலம் தனது செல்வாக்கையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் பைடன். எல்லாம் சரி, அல்-ஜவாஹிரியின் மரணம் அல்-கொய்தாவுக்கு முடிவு கட்டுமா?

யார் இந்த அல்-ஜவாஹிரி?

1951-ல் எகிப்தில் மருத்துவப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் அல்-ஜவாஹிரி. மதரீதியாகவும் புகழ்பெற்ற குடும்பம் அது. அவரது தாத்தா கெய்ரோவில் உள்ள மிக முக்கிய மசூதியான அல்-அஸார் மசூதியின் இமாமாக இருந்தவர். கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவம் படித்த அல்-ஜவாஹிரி, அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தேர்ச்சி கொண்டவர். எகிப்து ராணுவத்திலும் சிறிதுகாலம் மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார்.

இளம் வயதில் திரைப்படம் பார்ப்பது, இசையை ரசிப்பது என இயல்பாக இருந்தவர் அல்-ஜவாஹிரி. ஒருகட்டத்தில் அவருக்கு மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தில் எகிப்தை ஆண்டுவந்த கமேல் அப்துல் நாசர், மதச்சார்பின்மை கொள்கை கொண்டவர். இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கை கொண்ட ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ எனும் குழு அவரது அரசை எதிர்த்து தீவிரமாக இயங்கிவந்தது. அந்தக் குழுவைச் சேர்ந்த சய்யித் குத்பு எனும் மதகுருவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட அல்-ஜவாஹிரி, அந்தக் குழுவில் இணைந்தார். அக்குழுவுக்கு எதிராக நாசர் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது. 1966-ல் சய்யித் குத்பு தூக்கிலிடப்பட்டார். அக்குழுவினரில் பலர் தலைமறைவாகினர். அந்தக் காலகட்டத்தில் அல்-ஜவாஹிரி ‘இஸ்லாமிக் ஜிஹாத்’ எனும் அமைப்பை ஆரம்பித்தார்.

ஹோஸ்னி முபாரக் (இடது), அன்வர் சதாத்...

படுகொலையும் விடுதலையும்

1978-ல் எகிப்து அதிபர் அன்வர் சதாத், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒரு அரபு நாடு இஸ்ரேலை ஒரு தேசமாக அங்கீகரித்தது அதுவே முதல் முறை. ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதைக் கடுமையாகக் கண்டித்தனர். 1981-ல் ஒரு ராணுவ அணிவகுப்பின்போது இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டார் (அவருக்குப் பின்னர் அதிபரான ஹோஸ்னி முபாரக் பல ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடித்தார்). அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோரில் அல்-ஜவாஹிரியும் ஒருவர். பலருக்கு மரண தண்டனை கிடைத்தது. சிறையில் பல சித்திரவதைகளை அனுபவித்த அல்-ஜவாஹிரி, மற்றொரு தலைவரான இஸ்ஸாம் அல்-கமாரியின் இருப்பிடத்தைக் காட்டிக்கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு. பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மருத்துவம் பார்த்துக்கொண்டே பயங்கரவாதச் செயல்களுக்கான சதித்திட்டமும் தீட்டினார் ஜவாஹிரி. 1980-களில் பாகிஸ்தானின் பெஷாவருக்குச் சென்ற அவர், சோவியத் ஒன்றியப் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் காயமடையும் ஆப்கன் ஜிஹாதிகளுக்குச் சிகிச்சையளித்தார். அந்தக் காலகட்டத்தில் அல்-கொய்தா நிறுவனரான ஒசாமா பின்லேடனைச் சந்தித்தார். பின்னர் பல்வேறு தருணங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தனர். 1990-களில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற ஒசாமா, தாலிபான்களின் ஒத்துழைப்புடன் அல்-கொய்தா இயக்கத்தை வளர்த்தெடுத்தார். இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் தலைவரான அல்-ஜவாஹிரி தனது அமைப்பை அல்-கொய்தாவுடன் இணைத்தார். அல்-கொய்தாவின் இரண்டாவது பெரிய தலைவரானார். அதன் பின்னர் இருவரும் இணைந்து பல்வேறு பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றினர் - 3 ஆயிரம் பேரைக் காவு வாங்கிய செப்டம்பர் 11 தாக்குதல் உட்பட.

ஒசாமா பின்லேடனுடன் அல்-ஜவாஹிரி...

பலம் குறைந்த தலைவர்

2011-ல் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட பின்னர். அல்-கொய்தாவின் அடுத்த தலைவராக அய்மான் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்றார். ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா லேடனும் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், அல்-ஜவாஹிரிதான் அல்-கொய்தாவின் பிரதான முகமாக இருந்தார். அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் தாக்குதல் நடத்தச் சொல்லி பயங்கரவாதிகளுக்கு உத்தரவிட்டார். அதேசமயம், ஒசாமா பின் லேடன் அளவுக்கு கவர்ச்சிகரமான தலைவர் அல்ல அல்-ஜவாஹிரி.

அல்-கொய்தாவை வளர்த்தெடுப்பதில் அவரது முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இதற்கிடையே அல்-கொய்தா அமைப்பின் இராக் பிரிவு ஐஎஸ் அமைப்பாக உருமாற்றம் அடைந்தது. அல் பாக்தாதி அதை வழிநடத்தினார். ஐஎஸ் அமைப்பு அல்-கொய்தாவைவிட பல மடங்கு அதிகமான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஐஎஸ் அமைப்பினரால் அல்லது அந்த அமைப்பின் மீது அபிமானம் கொண்ட தனிநபர்களால் நடத்தப்பட்டவை. “பயங்கரவாதத்தின் எல்லைகளையே மீறி பைத்தியக்காரத்தனத்துடன் செயல்படுகிறது இந்த அமைப்பு” என்று அல்- ஜவாஹிரியே ஆதங்கப்படும் அளவுக்கு ஐஎஸ் உருவானது. சிரியாவில் அல்-கொய்தாவினருக்கும் ஐஎஸ் அமைப்பினருக்கும் இடையே பல்வேறு மோதல்களும் நடந்தன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

காஷ்மீரைப் பாலஸ்தீனத்துடன் ஒப்பிட்டுப் பேசிவந்த அல்-ஜவாஹிரி, அங்கு அல்-கொய்தாவின் பிரிவை வேர்பிடிக்கச் செய்ய தன்னாலான முயற்சிகளை எடுத்துவந்தார். 2014-ல் அல்கொய்தா - இந்தியத் துணைக்கண்டம் (ஏக்யூஐஎஸ்) எனும் பிரிவு இந்தியாவில் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார். 2021 செப்டம்பரில் ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கிலானி மரணமடைந்தபோது அவருக்கு அஞ்சலி தெரிவித்த அல்-ஜவாஹிரி, காஷ்மீர் தொடர்பாக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். எனினும், காஷ்மீரில் அல்-கொய்தா பிரிவின் தலைவரைப் பாதுகாப்புப் படைகள் சுட்டுக்கொன்றதையடுத்து அவரது முயற்சிகள் பிசுபிசுத்தன. பின்னர், கர்நாடக மாநிலத்தில் எழுந்த ஹிஜாப் பிரச்சினையைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். அடக்குமுறை செய்பவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

தாலிபான்களின் உண்மை முகம்

ஆப்கானிஸ்தானுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் இந்தியா, தாலிபான் ஆட்சி அமைந்த பின்னர் சற்று விலகியே இருந்தது. எனினும், பல பில்லியன் டாலர்களை அங்கு முதலீடு செய்திருக்கும் இந்தியா, அந்நாட்டு மக்களின் நலனை மனதில் கொண்டு தாலிபான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருக்கிறது. சமீபகாலமாக தாலிபான்கள் மீதான எதிர்மறையான பார்வையையும் தாண்டி அந்நாடுடனான உறவைப் பல நாடுகள் மெல்ல புதுப்பித்துவருகின்றன. இந்தியா உட்பட 30 நாடுகள் தங்கள் பிரதிநிதிகளை அங்கு அனுப்பின. அங்கிருந்தும் தாலிபான் பிரதிநிதிகள் பிற நாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.

இப்படியான சூழலில், ஜவாஹிரி காபூல் நகரின் மையப் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டில் செளகரியமாக வாழ்ந்துவந்தது தாலிபான்கள் மீதான கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் தகர்த்திருக்கிறது. காரணம், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு வழிவகுத்த தோஹா ஒப்பந்தத்தில், அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆப்கன் மண்ணில் தங்குவதற்கு தாலிபான் அரசு அனுமதிக்கக்கூடாது எனத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. மறுபுறம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் தாலிபான்கள் மிகவும் கோபமடைந்திருக் கின்றனர். ஒப்பந்தத்தை மீறி ஆப்கன் மண்ணில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக தாலிபான் அரசு குற்றம்சாட்டியிருக்கிறது.

அல்-ஜவாஹிரி தங்கியிருந்த வீட்டின் பால்கனி மீது நடந்த தாக்குதலுக்குப் பின்னர்...

பாகிஸ்தானின் பங்கு

அல்-ஜவாஹிரி காபூலுக்குச் செல்வதற்கு முன்னால் பல ஆண்டுகள் பாகிஸ்தானில்தான் தங்கியிருந்தார் எனத் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமல்ல, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத அமைப்புதான், காபூலில் அல்-ஜவாஹிரி தங்கியிருந்த பகுதியில் காவல் பணிகளை மேற்கொண்டது என்கிறார்கள். பாகிஸ்தான் மண்ணில் ஒசாமா பின் லேடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் கோபத்தை அதிகரித்தது தனிக்கதை. பின் லேடன் எப்படி பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு (அல்லது) அரசுக்குத் தெரியாமல் அங்கு தங்கியிருந்திருக்க முடியாதோ அதேபோல்தான் தாலிபான்களுக்குத் தெரியாமல் அல்-ஜவாஹிரியும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்க முடியாது. ஹக்கானி நெட்வொர்க்கைச் சேர்ந்த சிராஜுதீன் ஹக்கானி தான் தற்போது ஆப்கனின் உள் துறை அமைச்சர் என்பது கவனித்தக்க விஷயம். இன்னொரு புறம், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவரும் பாகிஸ்தான், பன்னாட்டு நாணய நிதியத்திடம் உதவி பெறுவது உள்ளிட்ட அனுகூலங்களுக்காக அல்-ஜவாஹிரியை அமெரிக்காவிடம் பலிகொடுத்திருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதையடுத்து அல்-கொய்தா பின்னடைவைச் சந்தித்திருப்பது உண்மைதான் என்றாலும், பல்வேறு பிரிவுகளைக் கொண்ட அந்த அமைப்பிலிருந்து புதிதாக யாரேனும் முளைத்துவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏமனில் அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அல் ஹவுதி தலைமையிலான ‘பிலீவிங் யூத்’ அமைப்பு, அவர் கொல்லப்பட்ட பின்னர்தான் விஸ்வரூபம் எடுத்தது. பயங்கரவாத அமைப்புகளின் இயல்பே அதுதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE