அதிரவைத்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை: கொந்தளித்த மகளிர் அமைப்புகள்!

By காமதேனு

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னர்ஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள க்ருகர்ஸ்டார்ப் நகரில் கடந்த வாரம் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்குள்ள கைவிடப்பட்ட தங்கச் சுரங்கம் ஒன்றில், ஜூலை 28-ம் தேதி 12 பெண்கள் உட்பட 22 பேர் அடங்கிய குழு ஒன்று இசை வீடியோ ஒன்றைப் படமாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது உடலில் போர்வை போர்த்தியபடி, ஆயுதங்கள் தாங்கிய கும்பல் ஒன்று அங்கு சென்று அவர்களை மிரட்டியது.

அனைவரையும் தரையில் படுக்குமாறு கட்டளையிட்ட அந்தக் கும்பல், அங்கிருந்த 8 பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. படப்பிடிப்புக் கருவிகள் உட்பட அந்தக் குழுவினர் வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்தச் சம்பவம் க்ருகர்ஸ்டார்ப் பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்க முழுவதும் பேசுபொருளானது.

ஜோகன்னர்ஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாகச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகம். ஸமா - ஸமா என அழைக்கப்படும் அவர்கள், கைவிடப்பட்ட அல்லது மூடப்பட்ட சுரங்கங்களில் சட்டவிரோதமாகத் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்திருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதக் குடியேறிகள் என்றே உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்நிலையில், க்ருகர்ஸ்டார்ப் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் நேற்று அந்நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படவிருக்கிறது. அவர்களில் சிலர் பாலியல் வன்கொடுமை புகார்கள் தவிர, சட்டவிரோதச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டது, சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு குற்றவாளிகளுக்கும் காவல் துறையினருக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். க்ருகர்ஸ்டார்ப் பகுதியில் கத்தி முனையில் பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்புகள் தெரிவித்தன.

சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிராகப் போராடிவரும் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சட்டவிரோதச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஸமா- ஸமாக்கள்தான் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் எனக் குற்றம்சாட்டிய அந்த அமைப்பினர் இதுதொடர்பாகப் பல முறை புகார் அளித்தும் அங்குள்ள காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காத காவல் நிலையத்தை முடக்க வேண்டும் என அரசு நிர்வாகத்திடம் வலியுறுத்தப்போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE