ஒரே ஒரு ஆமை: ஒன்றரை மணி நேரம் ஸ்தம்பித்த ரயில் சேவை!

By காமதேனு

இந்தியா உட்பட பல நாடுகளில், வாகனங்களிலும், ரயில்களிலும் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அபூர்வமாக, பயணத்தில் குறுக்கிடும் வனவிலங்குகளின் உயிரைக் காப்பாற்ற சிலர் முயற்சி எடுப்பதும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம் பிரிட்டனில் நடந்திருக்கிறது.

பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள நார்விச் மற்றும் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் இடையிலான ரயில்கள் நேற்று நண்பகலில் பாதி வழியில் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் தண்டவாளத்திலேயே காத்திருந்தன.

தண்டவாளத்தில் சில விலங்குகள் இருந்ததால் ரயில் சேவை முடங்கியதாக ‘கிரேட்டர் ஆங்கிலியா’ ரயில்வே நிறுவனம் முதலில் ட்வீட் செய்திருந்தது. பின்னர், ’ஒரு ராட்சத ஆமையால் ரயில்கள் நிறுத்தப்பட்டன’ என அந்நிறுவனம் தெரிவித்தது.

காயங்களுடன் தண்டவாளத்தில் நின்றிருந்த ஆமை

இதற்கிடையே, நார்விச் செல்லும் ரயிலில் இருந்த பயணி ஒருவர், தண்டவாளத்தின் மீது ஆமை நிற்கும் படத்தை ட்விட்டரில் பதிவிட்டார். ‘கிரேட்டர் ஆங்கிலியா’ ரயில்வே நிறுவனத்தை டேக் செய்த அவர் ‘அந்த ஆமை உயிருடன் இருக்கிறது; ஆனால் காயமடைந்திருக்கிறது’ எனத் தகவல் தெரிவித்தார். ஆமையின் மேல் ஓட்டின் ஒரு பகுதி உடைந்திருந்தது தெரியவந்தது.

பின்னர் அந்த ஆமை அங்கிருந்து தூக்கிச் சென்ற வனவிலங்கு நிபுணர் குழு, அதற்கு சிகிச்சை அளித்ததாகவும், விரைவில் அதன் காயம் ஆறிவிடும் என்று தெரிவித்ததாகவும் பயணிகள் கூறியிருக்கின்றனர்.

அருகில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திலிருந்து அந்த ஆமை தப்பித்துவந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அளவில் பெரிய அந்த ஆமை மிகவும் கனமாக இருந்ததால், உடனடியாக அதைத் தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை என்று பயணி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஆமை பத்திரமாக மீட்கப்படும் வரை ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. சக உயிர்களுக்கு மதிப்பளிப்பவர்கள் ஒரே ஒரு விலங்கு என்றாலும் அதற்கும் முக்கியத்துவம் கொடுக்கத்தானே செய்வார்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE