சமீபகாலமாகக் கடும் வெப்பத்தை எதிர்கொண்டிருக்கும் ஜப்பானியர்கள், இனி அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடியும் என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். ஆம், நாய்களுக்கு அணிவிக்கும் வகையில் விசிறி பொருத்தப்பட்ட ஆடைகள் அந்நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
வாட்டியெடுக்கும் வெப்ப அலை
ஜூன் மாதத்திலிருந்தே கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தை ஜப்பானியர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். மழைக்காலம் முன்னதாகவே முடிவுற்றுவிட்ட நிலையில் அங்கு வெப்பம் வாட்டிவருகிறது. டோக்கியோவில் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு 35 டிகிரி செல்சியஸ் எனும் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள குஷிரோ நகரில் வெப்பநிலை, 1910-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 33.5 டிகிரியைத் தொட்டிருக்கிறது. இன்னும் பல நாட்களுக்கு வெப்பம் தொடரும் என்பதால், அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளுமாறு மக்களுக்கு ஜப்பான் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
எப்படி உருவானது இந்த ஆடை?
இந்நிலையில், டோக்கியோவில் ‘ஸ்வீட் மம்மி’ எனும் பெயரில் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் ரெய் உஸாவா இந்தப் பிரத்யேக ஆடையை உருவாக்கியிருக்கிறார். சுவாவா வகை நாயை வளர்த்துவரும் அவர், நடைப்பயிற்சிக்காக அதை அழைத்துச் செல்லும்போது அது வெப்பம் தாங்காமல் விரைவிலேயே களைத்துவிடுவதை கவனித்தார். இதைத் தவிர்க்கும் வகையில் எதையாவது செய்தாக வேண்டும் என நினைத்த அவர், கால்நடை மருத்துவர் ஒருவரின் உதவியுடன் இந்த ஆடையைத் தயாரித்திருக்கிறார்.
80 கிராம் எடை கொண்ட இந்த விசிறி, பேட்டரி மூலம் இயங்குகிறது. வலைபோன்ற அமைப்பு கொண்டஆடையில் இந்த விசிறி பொருத்தப்படுவதால் நாய்களின் உடல் முழுவதும் குளிர்ந்த காற்று பரவும். இது கடும் வெப்பத்திலிருந்து நாய்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. “இந்த ஆண்டில் மழைப் பருவமே இல்லை என்று சொல்லிவிடலாம். அதனால்தான் வெப்பமான நாட்கள் விரைவிலேயே வந்துவிட்டன. இந்த ஆடைகளை நாய்களுக்கு மட்டுமல்ல, பூனைகளுக்கும் அணிவிக்கலாம்” என்று உஸாவா தெரிவித்திருக்கிறார்.
விசிறி பொருத்தப்பட்ட ஆடையைத் தங்கள் நாய்களுக்கு அணிவிப்பதால், அவற்றை நடைப்பயிற்சிக்கு அழைத்துவருவது எளிதாக இருப்பதாக ஜப்பானியர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.