இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் ஏராளமான அனுமதி பெறாத தங்கச் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படும் தங்கச் சுரங்கங்களில், உரிய பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சுலவேசி தீவில் இடைவிடாமல் கனமழை பெய்து வந்தது.
சுமாவா மாவட்டத்தில் உள்ள கொரண்டோலா பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் ஒன்றில் 35-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு 35 பேர் உயிருடன் மண்ணில் புதைத்தனர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது.
முதல் கட்டமாக 5 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை வரை 12 பேர் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சாலை வசதிகள் இல்லாததால், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை மீட்புப் படையினர் நடந்து செல்ல வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.