ரஷ்யர்களைக் கலங்க வைக்கும் ‘ஹைமார்ஸ்’: திசைமாறுமா உக்ரைன் போர்?

By ஆர்.என்.சர்மா

பொருளாதார, ராணுவ பலத்தில் ரஷ்யாவுக்கு எந்த வகையிலும் ஈடு இல்லாத உக்ரைன், மக்களின் தேசிய உணர்வு காரணமாகவே 150 நாட்களைக் கடந்தும் சரண் அடையாமல் தாக்குதலை தீரத்துடன் எதிர்கொள்கிறது. எளிதாகப் பணிய வைத்துவிடலாம் என்று தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யா, இப்போது பின்வாங்க முடியாமலும் தாக்குதலை நிறுத்த முடியாமலும் தவிக்கிறது.

அதிக ராணுவ வீரர்கள் எண்ணிக்கையோ, படை பலமோ இல்லாத உக்ரைன், எண்ணிக்கையில் குறைந்த ராணுவ வீரர்களுடன், தாங்களாகவே முன்வந்த உக்ரைனியர்களையும் சேர்த்துக்கொண்டு போர் புரிகிறது. அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கவில்லை. ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராணுவத்தினர் பலரும், தனிப்பட்ட முறையில் நாடுகளுக்கு படைபல சேவை அளித்துவரும் கூலிப்படையினரும் உக்ரைனுக்கே சென்று ஆலோசனைகள் வழங்குவதுடன் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி தருகின்றனர். சிலர் சண்டையிலும் பங்கேற்கின்றனர். ரஷ்ய ராணுவத் தாக்குதலை முறியடிக்கும் வழிகளைக் கற்றுத்தருகின்றனர்.

துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் போன்ற வழக்கமான ஆயுதங்களுடன் நேட்டோ நாடுகள் மிகச் சமீபத்தில் அளித்த ‘ஹைமார்ஸ்’ என்ற ஆயுதம்தான் இப்போது ரஷ்யர்களைக் கலங்கச் செய்கிறது. High Mobility Artillery Rocket Systems என்ற வார்த்தையின் சுருக்கமே ஹைமார்ஸ். இதை M142 ரகம் என்கிறார்கள். ‘ரஷ்ய வீரர்கள் போர்க்களத்தில் நடத்தும் கொள்ளை, பாலியல் வல்லுறவு, சித்திரவதை, கொலை ஆகியவற்றுக்குப் பதிலடியாக வந்துவிட்டது ஹைமார்ஸ்’ என்று கெர்சான் ஒப்லாஸ்ட் என்ற உக்ரைனியப் பிரதேசத்தில் சுவரொட்டிகளை சமீபத்தில் ஒட்டினார்கள்.

உக்ரைனுக்குப் பிறகு நம் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்று அஞ்சிக்கொண்டிருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஹைமார்ஸ் எந்த அளவுக்கு ரஷ்யர்களுக்குச் சேதம் விளைவிக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தங்கள் நாட்டுக்கும் தேவை என்று அமெரிக்காவுக்குத் தந்தி அடிக்கிறார்கள். கோடிக்கணக்கான டாலர்களை முன்பணமாக தந்து, இதை ஆயிரக்கணக்கில் தங்களுக்கு உடனடியாக சப்ளை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவை நெருக்குகின்றனர்.

எப்படிப்பட்டது ஹைமார்ஸ்?

ஹைமார்ஸ் என்பது போர்க்களத்தில் வைத்தே ஏவுகணைகளை ஏவக்கூடிய நடமாடும் ராக்கெட் லாஞ்சர் வாகனம். இது எடை குறைவானது. நவீனத் தொழில்நுட்பங்களுடன் கணினி வசதிகளையும் நவீனத் தகவல் தொடர்பு சாதனங்களையும் கொண்டிருப்பது. இதன் நீளம் 7 மீட்டர், அகலம் 2.4 மீட்டர், உயரம் 3.2 மீட்டர். இதிலிருந்து ஏவப்படும் ஏவு குண்டுகள் 50 மைல்கள் முதல் 75 மைல்கள் அல்லது 80 கிலோமீட்டர் முதல் 120 கிலோமீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். ஒரே சமயத்தில் 6 ஏவுகுண்டுகளை ஒரு தொகுப்பில் ஏவ முடியும். ஒரு தொகுப்பு ஏவி முடிந்துவிட்டால் உடனடியாக அடுத்த தொகுப்பைச் சில நிமிடங்களுக்குள் இதில் நிரப்பிவிட முடியும். இதைச் செய்ய அதிக ஆட்கள் தேவையில்லை.

இந்த வாகனம் உக்ரைன் எல்லைக்குள்ளேயே கண்ணுக்குத் தெரியாத தொலைவில் இருந்துகொண்டு தொலைவில் உள்ள ரஷ்ய கவச வாகனங்களையும் டாங்குகளையும் பீரங்கிகளையும் மின்னல் வேகத்தில் தாக்கி அழிக்கும். அவை மட்டுமல்லாது ரஷ்ய ராணுவம் அமைத்துள்ள தற்காப்பு அரண்கள், ராணுவத் தளபதிகளின் முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள், ராணுவ வீரர்களின் பாசறைகள் என்று எதையும் தாக்கித் தகர்த்துவிடும். ரஷ்யா உடனடியாக பதிலடி கொடுக்க முனைந்தால்கூட, தாக்கிய ஏவு வாகனம் எங்கே என்று கண்டுபிடிப்பதற்குள் அடுத்த தாக்குதல் நடந்துவிடும். கடந்த ஜூன் 25-ம் தேதி தான் இவை உக்ரைனுக்குக் கொண்டு செல்லப்பட்டன. பிறகு உக்ரைன் வீரர்களுக்கு இதில் பயிற்சி தரப்பட்டது.

உக்ரைனுக்கு முதலில் எட்டு ஹைமார்ஸ் ஏவு வாகனங்கள் தரப்பட்டன. அதைக் கொண்டே ரஷியாவின் ஆயுதக் கிடங்கு, தளபதிகளின் தலைமையகம், விமானத் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஏற்படுத்திய தற்காப்பு அரண் ஆகியவற்றை அழித்துவிட்டது. இந்த ஏவு வாகனங்கள் எத்தனை, அவை எங்கே இருக்கின்றன என்று தேடுவதைவிட - இருக்கும் பீரங்கிகள், கவச வாகனங்கள், ஆயுத சாலைகள், ராணுவப் பாசறைகள், தளபதிகளின் தங்குமிடங்கள், தகவல் தொடர்பு வசதிகள், சாலைகள் ஆகியவை தாக்கப்படாமல் தடுப்பதே ரஷ்யாவுக்கு அவசிய முன்னுரிமையாகிவிட்டது.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, உக்ரைனின் முன்களப் படை முக்கியப் பங்காற்றுகிறது. அது ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி, ரஷ்யர்களின் படை முகாம், ஆயுதசாலை, ராணுவ வீரர்களின் பாசறை, தகவல் தொடர்பு மையம், தளபதிகளின் தலைமையிடம் ஆகியவற்றை நேரில் பார்த்து, வரைபட உதவியுடன் அவை உக்ரைனிலிருந்து எத்தனாவது மைலில் எந்தக் கோணத்தில் இருக்கிறது என்று சங்கேத மொழியில் தகவல் தெரிவிக்கிறது. உடனே ஏவு வாகனத்திலிருந்து குண்டுகள் பொழியும். அவை சரியாகத்தான் இலக்குகளை அழித்தனவா, முன் பின்னாக விழுந்திருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று தகவலைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது குழு. இதனால் துல்லியத் தாக்குதல் மூலம் ரஷ்யப் படைகளை உக்ரைன் நிலைகுலையச் செய்கிறது.

ஜூன் 25-ல் இவை பெறப்பட்டன. ஜூலை 16-ல் ரஷ்யாவின் 30 பெரிய இலக்குகள் அழிக்கப்பட்டன. இவை ரஷ்ய நாட்டுக்குள், உக்ரைனிலிருந்து வெகுதொலைவில் பாதுகாப்பாக இருப்பவை என்று கருதப்பட்டவை. இந்தத் தாக்குதலின் தன்மைதான் இப்போது ரஷ்யாவை யோசிக்க வைக்கிறது. உக்ரைனிலிருந்து கோதுமையை ஏற்றுமதி செய்துகொள்ள உடன்பாடு செய்து கொண்டதற்கும் ஹைமார்ஸ் தாக்குதல்கள் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் என்ற உக்ரைனின் கிழக்குப் பிரதேசங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்யா அங்கே படைகளையும் ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தது. உக்ரைனைவிட அதிக எண்ணிக்கையில் பீரங்கிகளையும் கவச வாகனங்களையும் வைத்திருப்பதால் உக்ரைனை கடந்த சில மாதங்களாக சேதம் அடைய வைத்தது. நம்மை அழிக்கும் வல்லமை உக்ரைனுக்கு இல்லை என்று இறுமாந்தது. இப்போதோ படையையும் ஆயுதங்களையும் ஒரு அங்குலம் கூட நகர்த்தாமலேயே இழப்புகளைச் சந்திக்கிறோமே, இருந்த இடத்திலேயே இப்படி பேரிழப்பு ஏற்படுகிறதே என்று கவலைப்படுகிறது ரஷ்யா. இருந்தாலும், உக்ரைனில் ஹைமார்ஸ் ஆயுதக் கிடங்கையே அழித்துவிட்டதாக அறிக்கை வெளியிடுகிறது.

இழந்த கீவ் பகுதியை உக்ரைனியர்கள் மீட்டுவிட்டார்கள் அதற்குக் காரணமே ஹைமார்ஸ் தான் என்று ஆஸ்திரேலிய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர்-ஜெனரல் மிக் ரயான் நம்புகிறார். கடைசியாக உக்ரைன் போரின் திசையை மாற்றிவிட்டது ஹைமார்ஸ் என்கிறார் அமெரிக்க ராணுவத்தின் ஓய்வு பெற்ற ஜெனரல் மார்க் ஹெர்ட்லிங்.

சிறப்பு என்ன?

ஹைமார்ஸ் இவ்வளவு கொண்டாடப்படக் காரணம் அதன் துல்லியத் தன்மைதான். இராக்கில் போரிட வேண்டிய நேரத்தில், எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டது. பலுஜா என்ற இடத்தில் இராக்கிய ராணுவம் மக்கள் தொகை மிகுந்த பகுதியில் தன்னை நிறுத்திக்கொண்டது. ராணுவத்தைத் தான் தாக்குகிறார்கள் என்றாலும் உடன் சிவிலியன்கள் பகுதிக்கும் பலத்த சேதமும் உயிர்ச்சேதங்களும் ஏற்படும். அதை உலகம் வன்மையாகக் கண்டிக்கும். ராணுவ முகாமை விட்டுவிட்டு வேண்டுமென்றே மக்களைக் கொன்றதாகக்கூட குற்றம்சாட்டப்படும். எனவே இலக்கை மட்டும் அழிக்கும் அளவுக்கு ஏவுகணைகள் துல்லியமாக வழிநடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைப்படி உருவாக்கப்பட்டதுதான் ஹைமார்ஸ். இலக்கை நிர்ணயிக்க இதில் கைரோஸ்கோப்புகள், ஆக்சிலரோமீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏவு வாகனம் இருக்கும் இடம், அதன் இலக்கு உள்ள இடம் இரண்டையும் நிர்ணயம் செய்து, அதன் தொலைவு, வடிவம், கோணம், உயரம், அகலம் ஆகிய அனைத்தையும் உறுதி செய்துகொண்ட பிறகு விநாடிக் கணக்கில் புறப்பட்டு தாக்கி அழிக்கிறது ஹைமார்ஸ்.

எல்லாவற்றையும்விட முக்கியம் இதில் பயன்படும் ஆயுதம், பிற ஏவுசாதன ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் விலை குறைவானது. அதிகமில்லை ஒரு லட்சம் டாலர்கள்தான். ரஷ்யத் தயாரிப்பான எஸ் 300 போன்ற வான் பாதுகாப்பு ஏவுகணைத் திட்டங்கள் கோடிக்கணக்கான டாலர் செலவில் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் ஒப்பிடுகையில் விலை மலிவு. எல்லாவற்றையும்விட முக்கியம், எதிரி நம்மை எந்த திசையிலிருந்தும் தாக்கலாம் என்ற கிலி ரஷ்ய ராணுவத்தை நிலைகுலையச் செய்து வருகிறது. இதோ எதிரில்தான் இருக்கிறது உக்ரைன் என்று நினைத்து இனி சண்டையிட முடியாது.

ரஷ்யாவின் அச்சம்

இப்போதைக்கு ரஷ்ய ராணுவம் தன்னுடைய பீரங்கிகள், கவச வாகனங்களை ரஷ்ய நகரங்களுக்கு அண்மையில் குவிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜூலை 11 இரவு கெர்சான் நகர நகரமன்றத் திரையரங்கில் தங்களுடைய ஆயுதங்களைக் கொண்டு போய் வைத்ததாம் ரஷ்ய ராணுவம்! நகரங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதங்களையும் பீரங்கிகளையும் கொண்டுபோய் நிறுத்தினால், ஹைமார்ஸ் மூலம் உக்ரைன் அழித்தால்கூட நகரங்களைத் தாக்குகிறார்கள் என்று சொல்லி போரைத் தீவிரப்படுத்த முடியும் என்று ரஷ்யா நினைப்பதைப்போலத் தெரிகிறது.

வெகு விளையாட்டாகத் தொடங்கிய இந்தத் தாக்குதல் இறுதியில் அணு ஆயுதப் போரில் கொண்டுபோய் விட்டுவிடுமோ என்ற அச்சம் கூட எழுகிறது. ஹைமார்ஸ் ஏவு வாகனத்தை உக்ரைனிய ஆண்கள் மட்டுமல்ல பெண் வீரர்களும் எளிதாகவும் வெற்றிகரமாகவும் கையாள்கிறார்கள். இதுவரை 12 ஹைமார்ஸ்தான் தரப்பட்டிருக்கிறது. மேலும் நான்கு அனுப்பப்படுகிறது. இப்போதைக்கு அதிகபட்சம் 20 தான் தர முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. “போதாது, மேலும் 100 ஹைமார்ஸ் தாருங்கள், இழந்த உக்ரைனிய எல்லைகளை மீட்டாக வேண்டும்” என்கிறார் உக்ரைன் ராணுவ அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்கினோவ். 2014-ல் ரஷ்யா கைப்பற்றிய கிரைமியா, டோன்பாஸ் பகுதிகளையும் சேர்த்து மீட்டால்தான் போரில் தாங்கள் வென்றதாக அர்த்தம் என்கிறது உக்ரைன்.

ஏன் இன்னும் அதிக எண்ணிக்கையில் ஹைமார்ஸ் தரப்படவில்லை என்று அமெரிக்காவின் நேச நாடுகளே இப்போது கேட்கத் தொடங்கிவிட்டன. நாங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள விரும்புகிறோம், இதை அதிகம் அளித்தால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தாக்குதலில் சமபல நிலைமை மாறிவிடும் என்கிறது அமெரிக்கா. பிரிட்டனிடம் உள்ள எம்270 ரக பல குழல் ஏவு வாகனம் இரண்டுக்கு ஒரு ஹைமார்ஸ் இணை என்கிறார்கள். இவ்வளவு என்று குறிப்பிடாமல் ஏராளமான எம்270 ஏவுவாகனங்களை தர பிரிட்டன் முன் வந்திருக்கிறது. அவையும் வந்துவிட்டால் ரஷ்யாவுக்குச் சேதம் அதிகரிக்கும்.

ஹைமார்ஸுக்கு அண்ணன்

ஹைமார்ஸ் ராக்கெட் ஏவு வாகனத்தைவிட ஆற்றலிலும் தாக்கும் திறனிலும் அதிகமான பிரிசிஷன் ஸ்டிரைக் மிசைல் என்ற அடுத்த கட்ட வாகனத்தை அமெரிக்கா தயாரித்துக்கொண்டிருக்கிறது. இது இருந்த இடத்திலிருந்தே 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அழித்துவிடும். இப்போதுள்ள நேட்டோ நேச நாடுகள் சிலவற்றுக்கு இது கிடைத்தால் மாஸ்கோவின் புறநகர்களையே அவற்றால் அழித்துவிட முடியும். லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா நாடுகளை ரஷ்யா தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருப்பதால் அவையும் ஹைமார்ஸ் ஏவு வாகனத்துக்கு ஆர்டர்களைக் குவித்து வருகின்றன. அத்துடன் இதே போன்ற ஏவுகணை ஆயுதங்களையும் அதிகம் வாங்க முடிவு செய்துள்ளன. ஆயுத விற்பனை, தீபாவளி பட்டாசுகளைப் போல களத்தில் புதிது புதிதாக அறிமுகம் ஆவது ஆயுத நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் வருவாயையும் மகிழ்ச்சியையும் தரும். ஆனால் உலக அமைதி?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE