இராக்கில், கடந்த பல மாதங்களாக நிலவிவரும் அரசியல் குழப்பத்தின் உச்சகட்ட காட்சிகள் நேற்று அரங்கேறின. முன்னாள் அமைச்சர் முகமது அல்-சூடானி பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டதைக் கண்டித்து, மதத் தலைவரும் அரசியல் கட்சித் தலைவருமான முக்தடா அல்- சாதரின் ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற நுழைவுப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தலைநகர் பாக்தாதில் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட ‘கிரீன் ஸோன்’ பகுதியில் உள்ள நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த அவரது ஆதரவாளர்கள், தேசியக் கொடியை ஏந்தியபடி, நாடாளுமன்றத்துக்குள் வலம் வந்தனர். கும்பலாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் பாடல்கள் பாடி, நடனமாடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். முன்னதாக அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதைத் தடுக்க கண்ணீர் புகைகுண்டு வீசி, கூட்டத்தைக் கலைக்க காவலர்கள் முயன்றனர். எனினும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உக்கிரமாக நுழைந்த அல்- சாதரின் ஆதரவாளர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் அங்கேயே இருந்தனர். இந்நிலையில், அல்-சூடானி ஊழல்வாதி என்பதால் அவரை எதிர்ப்பதாக அல்-சாதரின் ஆதரவாளர்கள் கூறினர்.
கிரீன் ஸோன் பகுதியில் இராக் நாடாளுமன்றம் மட்டுமல்லாமல், பல நாடுகளின் தூதரகங்களும் அமைந்திருக்கின்றன. இந்நிலையில், போராட்டக்காரர்கள் உடனடியாகக் கலைந்து செல்ல வேண்டும்; இல்லையென்றால் பாதுகாப்புப் படைகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தற்போதைய பிரதமர் முஸ்தபா அல்-காதேமி எச்சரிக்கை விடுத்தார். எனினும், போராட்டக்காரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. பின்னர் அல்-சாதர் கேட்டுக்கொண்டதையடுத்து, அனைவரும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினர்.
நாடாளுமன்றத்தில் தனது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் உற்சாகமடைந்திருக்கும் அல்-சாதர், ‘இது சீர்திருத்தத்துக்கான புரட்சி, அநீதியையும் ஊழலையும் நிராகரிக்கும் செயல்’ என ட்வீட் செய்தார். ‘உங்கள் குரல் செவிசாய்க்கப்பட்டுவிட்டது. நீங்கள் ஊழல்வாதிகளை நடுங்கவைத்துவிட்டீர்கள்’ என்று தனது ஆதரவாளர்களைப் பாராட்டிய அவர், பத்திரமாக வீடு திரும்ப பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரச்சினையின் பின்னணி
இராக்கில் 2021 அக்டோபர் 10-ல் தேர்தல் நடந்த நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இதுவரை யாரும் பிரதமராகப் பொறுப்பேற்க முடியவில்லை. ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசியல் கூட்டணியான ‘ஃபடா மற்றும் ஸ்டேட் ஆஃப் லா’ கூட்டணி, தங்களுக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது எனக் கூறிவருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த இன்னொரு கட்சியான முக்தடா அல்-சாதரின் ‘சாதரிஸ்ட் மூவ்மென்ட்’ கட்சி தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறிவருகிறது. 329 இடங்களைக் கொண்ட இராக் நாடாளுமன்றத்தில், 73 இடங்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட அல்-சாதர், 2003-ல் இராக்கில் நுழைந்த அமெரிக்கப் படைகளுக்கு எதிராப் போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!
தற்போதைய நிலவரம்
ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசியல் கூட்டணியான ‘ஃபடா மற்றும் ஸ்டேட் ஆஃப் லா’ கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கட்டமைப்பு கூட்டணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். முன்னாள் அமைச்சரும், ஆளுநராகப் பதவி வகித்தவருமான முகமது அல்-சூடானியைப் பிரதமராக்க ஈரான் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஒருங்கிணைப்பு கட்டமைப்பு கூட்டணி முடிவுசெய்திருக்கிறது.
இதற்கிடையே, பெரும்பான்மை அரசை அமைப்பது குறித்து அல்-சாதர் வலியுறுத்திவந்தார். எனினும், அதில் ஒருமித்த முடிவு எடுக்கப்படாததால், தனது கட்சியைச் சேர்ந்த 73 எம்.பி-க்களும் ராஜினாமா செய்வார்கள் எனக் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து இராக்கின் அரசியல் குழப்பம் மேலும் அதிகரித்தது.
எண்ணெய் வளமிக்க இராக், தற்போது உலக அளவில் எரிபொருள் விலையில் ஏற்பட்டிருக்கும் உயர்வால் பொருளாதார ரீதியில் பலனடைந்துவருகிறது. எனினும், அரசியல் குழப்பங்களையும், சமூக-பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டிருப்பதால் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.