‘புகைப்பழக்கம் இல்லா தலைமுறையை உருவாக்கும் முயற்சி!’ - சிகரெட்டுக்குக் கட்டுப்பாடு கொண்டுவரும் நியூசிலாந்து

By காமதேனு

உலகிலேயே முதன்முறையாக, சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையிலான கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது நியூசிலாந்து.

சிகரெட் இல்லாத தலைமுறையை உருவாக்கும் வகையில் கொண்டுவரப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவு குறைக்கப்படும். புகையிலைக்கான பிரத்யேகக் கடைகளில் மட்டுமே சிகரெட் விற்கப்படும். இதன் மூலம், வழக்கமாக சாலையோரக் கடைகள் முதல் எல்லா கடைகளிலும் சிகரெட் விற்கப்படுகின்ற சூழல் முடிவுக்கு வரும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிறார்கள் சிகரெட் வாங்க முடியாத வகையில் வயது வரம்பு கொண்டுவரப்படுகிறது. 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் சிகரெட் வாங்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வயது வரம்பு அதிகரிக்கப்படும்.

இந்த மசோதாவை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகப்படுத்திப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ஆயிஷா வீர்ரால், “புகையிலை நிறுவனங்கள் பல தசாப்தங்களாக தங்கள் தயாரிப்புகள் மூலம் மக்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை அதிகரிக்கச் செய்து, தங்கள் சந்தையை வளர்த்துவந்திருக்கின்றன. இது மிகவும் அருவருக்கத்தக்கது; விசித்திரமானது. நம் நாட்டில், சிகரெட் வாங்குவதைவிடவும் சாண்ட்விச் வாங்குவதற்குத்தான் அதிகப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இந்த மசோதாவைக் கொண்டுவருவதன் மூலம் விலைமதிப்பற்ற நமது மக்கள், குடும்பங்கள், நமது சமூகங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதே நமது முன்னுரிமை என்பதை பதிவுசெய்கிறோம்” என்றார்.

இந்த மசோதா தற்போது முதற்கட்டத்தில் உள்ளது. ஒரே ஒரு கட்சி நீங்கலாக பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் தேர்வுக்குழு மூலம் இது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது கட்டத்தில், நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் கேட்டறியப்படும். சட்ட வடிவம் பெற்றதும் 2023 முதல் இது அமல்படுத்தப்படும். இந்த சட்டம் புகையிலைப் பொருட்களுக்கானது மட்டுமே. மற்றபடி, இ-சிகரெட் பயன்பாடு சட்டபூர்வமாக நீடிக்கும்.

நியூசிலாந்தின் எதிர்க்கட்சியான தேசிய கட்சி வரவேற்றிருக்கிறது. எனினும், இது செயல்படுத்தப்படும் விதம் குறித்த கவலை இருப்பதாக அக்கட்சியின் எம்.பி-யான மேட் டூக்கி கூறியிருக்கிறார். “இந்தச் சட்டத்தின் விதிமுறைகளில் பெரும்பாலானவை சர்வதேச அளவில் அமல்படுத்தப்பட்டிராதவை. சில அம்சங்கள் உலகிலேயே முதன்முறையாக நியூசிலாந்தில்தான் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இது உலகிலேயே முதன்முறையா என்பது பற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை. ஆனால், நடைமுறையில் பரிசோதிக்கப்படாத அம்சங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பசுமைக் கட்சியும் (Green party) இதே போன்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. நோக்கம் நல்லதுதான் என்றாலும், இந்தச் சட்டத்தின் மூலம் புகையிலைச் சந்தையில் சட்டவிரோத விற்பனை அதிகரிக்கும் என அக்கட்சி கருதுகிறது. வலது சாரி கட்சியான ஆக்ட் கட்சி மட்டும் இந்த மசோதாவை எதிர்த்திருக்கிறது.

இந்தச் சட்டத்தின் மூலம் 2025-ம் ஆண்டுவாக்கில் புகைப்பழக்கம் இல்லா நியூசிலாந்தை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE