‘மியான்மர் ராணுவ அரசைக் கட்டுப்படுத்துங்கள்’ - சீனாவை வலியுறுத்தும் அமெரிக்கா

By காமதேனு

ஆங் சான் சூச்சியின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி, ஜனநாயகச் செயற்பாட்டாளர் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கும் மியான்மர் ராணுவ அரசுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. இந்நிலையில், மியான்மருக்கு மிகவும் நெருக்கமான நாடாகக் கருதப்படும் சீனா இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

மியான்மர் ராணுவ அரசை சீனா கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ராணுவ ஆட்சியுடனான உறவு என்பது வழக்கமான ஒன்றாகத் தொடர முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் முன்னாள் எம். பி-யான பியோ ஜியா தாவ், கியாவ் மின் யு, ஹ்லா மியோ ஆங், ஆங் துரா ஸாவ் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ராப் பாடகராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் இருந்தவர் பியோ ஜியா தாவ் (41). ‘ஆசிட்’ எனும் பெயரில் ஹிப்-ஹாப் குழுவை உருவாக்கிய அவர், 2000-ல் மியான்மரின் முதல் ராப் ஆல்பத்தை வெளியிட்டவர். 2012 தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றக் கீழவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

53 வயதான கியாவ் மின் யு (53) சமூகச் செயற்பாட்டாளர். ‘ஜிம்மி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டவர். 1988-ல் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடியதால் கைதுசெய்யப்பட்டவர். ‘88 தலைமுறை மாணவர் குழு’ எனும் பெயரில் அமைப்பைத் தொடங்கியவர். 2005-ல் விடுதலை செய்யப்பட்ட அவர், 2007-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 2012-ல் விடுவிக்கப்பட்டார். 2021 அக்டோபர் மாதம் அவரை ராணுவம் கைதுசெய்தது. ஹ்லா மியோ ஆங், ஆங் துரா ஸாவ் இருவரும் யாங்கோன் நகரில், ராணுவத்துக்குத் தகவல் தெரிவிக்கும் ஏஜென்டாக இருந்த ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு எப்போது, எப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. மியான்மர் ராணுவ அரசின் இந்நடவடிக்கை குரூரமானது; பிற்போக்குத்தனமானது என ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிஷெல் பாச்செலெட் கண்டனம் தெரிவித்திருக்கிறார். எந்தச் சூழலிலும் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும், மியான்மர் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட அதிபர் வின் மையின்ட், ஸ்டேட் கவுன்சிலர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஐநா பொதுச் செயலர் ஆன்டோனியோ குத்தேரஸ் கூறியிருப்பதாக அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்கா, பிரிட்டன், நார்வே, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளும் இணைந்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் அரசியல் தலைவர்கள், சிறுபான்மை இனக்குழு பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் இணைந்து நடத்தும் போட்டி அரசின் (தேசிய ஒற்றுமை அரசு - என்யூஜி) மனித உரிமைகள் துறை அமைச்சர் ஆங் மியோ மின், “நால்வருக்கும் மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் மக்களிடையே அச்சத்தைப் பரப்பி ஆட்சி நடத்த ராணுவ அரசு முனைவதைக் காட்டுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மியான்மர் ராணுவத்தின் நீண்டகால நட்பு நாடான சீனா இவ்விவகாரம் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை எனும் கொள்கையைச் சீனா எப்போதுமே கடைப்பிடிப்பதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ், நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மியான்மரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு ஆற்றல் கொண்ட நாடு சீனா மட்டும்தான் எனக் குறிப்பிட்டார். “மியான்மர் ராணுவ அரசு இதுவரை பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளையோ, ராஜதந்திர அழுத்தங்களையோ சந்தித்ததில்லை” என்று சுட்டிக்காட்டிய அவர், “மியான்மர் ராணுவ அரசை சீனா கட்டுப்படுத்த வேண்டும். ராணுவ ஆட்சியுடனான உறவு என்பது வழக்கமான ஒன்றாகத் தொடர முடியாது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE