மியான்மர்: ஜனநாயகவாதிகள் உட்பட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

By சந்தனார்

மியான்மரில், ஆங் சான் சூச்சியின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி, ஜனநாயகச் செயற்பாட்டாளர் உட்பட 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது ராணுவ அரசு. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மரண தண்டனையை அந்நாட்டு அரசு நிறைவேற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்த 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மியான்மர் ராணுவ அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘குளோபல் நியூ லைட்’ ஊடகம் தெரிவித்திருக்கிறது. அவர்களுக்கு எப்போது, எப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஜனநாயகப் படுகொலை

பல தசாப்தங்களாகவே மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகள் நீடித்ததில்லை. 1962-ல் பிரதமர் யூ நூவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் ஆட்சியைப் பிடித்த பின்னர் மியான்மரில் ஜனநாயகத்தின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு பல்வேறு அடக்குமுறைகள் மூலம் ஆட்சி நிர்வாகத்தை நடத்திவந்த ராணுவம், 1988-ல் மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய போராட்டங்களுக்குப் பின்னர், 1990-ல் தேர்தலை நடத்த ராணுவம் ஒப்புக்கொண்டது. போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த சூச்சி, ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி’ - என்எல்டி) எனும் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். மொத்தம் உள்ள 492 இடங்களில் 392-ல் அவரது கட்சி வென்றது. ஆட்சியமைக்கவிருந்த நேரத்தில் ராணுவம் அவரைக் கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்தது. ஆட்சி மீண்டும் ராணுவத்தின் வசமானது.

ஆங் சான் சூச்சி

அதன் பின்னர் சர்வதேச அளவில் சூச்சிக்குப் பெருகிய ஆதரவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள், 2010-ல் மீண்டும் தேர்தலை நடத்த ராணுவத்துக்கு அழுத்தம் தந்தன. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் ராணுவத்தினருக்கு 25 சதவீத இடங்களை உறுதிசெய்யும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டிருந்தது ராணுவம். ராணுவத்தின் ஆதரவு பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மென்ட் (யூஎஸ்டிபி) கட்சி அந்தத் தேர்தலில் அதிக இடம் பெற்று ஆட்சியைப் பிடித்தது. முறைகேடு நடப்பதாகச் சொல்லி அந்தத் தேர்தலை சூச்சி புறக்கணித்தார்.

மீண்டும் இரும்புத் திரை

2012-ல் நடந்த இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற என்எல்டி கட்சி, 2015 தேர்தலில் முழுமூச்சுடன் போட்டியிட்டு வென்றது. அதிபராகியிருக்க வேண்டிய சூச்சி, அவரது கணவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், தனது கட்சியைச் சேர்ந்த யு தின் யாவை அதிபராக்கினார். சூச்சிக்கும் ராணுவத்துக்கும் இடையில் சுமுக உறவு இருப்பதாகவே கருதப்பட்டது.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திய இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு மவுனமாகத் துணை நின்ற சூச்சி, சர்வதேச நீதிமன்ற விசாரணையில் ராணுவத்தின் செயல்களை ஆதரித்துப் பேசியதால், சர்வதேச அளவில் தார்மிக ஆதரவை இழந்தார்.

இந்தச் சூழலில், 2021 பிப்ரவரி 1-ம் தேதி மியான்மர் ராணுவம் அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஸ்டேட் கவுன்சிலர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆட்சிப் பொறுப்பைக் கைவசம் வைத்திருக்கும் மின் ஆங் ஹ்லாய்ங் தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களில் முக்கியப் பங்கு வகித்தவர்.

பல ஆண்டுகள் சிறை

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் 2021 டிசம்பர் 6-ல், ஆங் சான் சூச்சிக்கு 4 வருடச் சிறைத் தண்டனை விதித்தது ராணுவ நீதிமன்றம். தவிர, உரிமம் இல்லாத வாக்கி-டாக்கி வைத்திருந்தது, 2020 தேர்தல் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையில் நடந்துகொண்டது என்பன உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. 2022 ஜனவரி 10-ல் ஒரு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 2022 ஏப்ரல் 27-ல் இன்னொரு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. ஆயுள் முழுவதும் அவரைச் சிறையில் அடைத்து வைக்கவே ராணுவ அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், அவரது கட்சியைச் சேர்ந்தவர் உட்பட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நால்வரின் உறவினர்களும், உடல்களைப் பெற்றுக்கொள்ள யாங்கோனில் உள்ள இன்செய்ன் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.

யார் யார்?

ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் முன்னாள் எம். பி-யான பியோ ஜியா தாவ், கியாவ் மின் யு, ஹ்லா மியோ ஆங், ஆங் துரா ஸாவ் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஹ்லா மியோ ஆங், ஆங் துரா ஸாவ் இருவரும் யாங்கோன் நகரில், ராணுவத்துக்குத் தகவல் தெரிவிக்கும் ஏஜென்டாக இருந்த ஒரு பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்கள். மற்ற இருவரும் மியான்மருக்குள்ளும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர்கள்.

பியோ ஜியா தாவ்

அரசியலுக்குள் நுழையும் முன்னர் ராப் பாடகராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் இருந்தவர் பியோ ஜியா தாவ் (41). ‘ஆசிட்’ எனும் பெயரில் ஹிப்-ஹாப் குழுவை உருவாக்கிய அவர், 2000-ல் மியான்மரின் முதல் ராப் ஆல்பத்தை வெளியிட்டவர். அந்தக் காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த ராணுவத்துக்கு எதிராக ஒலித்த அவரது பாடல்கள் இளைஞர்களிடையே பெரும் உத்வேகம் தந்தன. 2012 தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றக் கீழவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் (அதே ஆண்டில்தான் ஆங் சான் சூச்சி நாடாளுமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டார்).

கியாவ் மின் யு

53 வயதான கியாவ் மின் யு (53) சமூகச் செயற்பாட்டாளர். ‘ஜிம்மி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டவர். 1988-ல் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடியதால் கைதுசெய்யப்பட்டவர். ‘88 தலைமுறை மாணவர் குழு’ எனும் பெயரில் அமைப்பைத் தொடங்கியவர். 2005-ல் விடுதலை செய்யப்பட்ட அவர், 2007-ல் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 2012-ல் விடுவிக்கப்பட்டார். 2021 அக்டோபர் மாதம் அவரை ராணுவம் கைதுசெய்தது.

கியாவ் மின் யு புகழ்பெற்ற எழுத்தாளரும்கூட. சிறையில் இருந்த நாட்களில், டான் பிரவுனின் ‘தி டா வின்சி கோட்’, ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். ‘தி மூன் இன் இன்லே லேக்’ எனும் நாவலையும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘மேக்கிங் ஃபிரெண்ட்ஸ்’ எனும் சுயமுன்னேற்ற நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பின்னர், இதுவரை 14,847 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் 11,759 பேர் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என ‘அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் பர்மா’ (ஏஏபிபி) எனும் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

30 ஆண்டுகளுக்குப் பின்னர்...

76 பேருக்கு இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 41 பேர் ஆஜராக நிலையிலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த நால்வருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நால்வரும் மேல் முறையீடு செய்திருந்தனர். எனினும், கடந்த மாதம் அவர்களது தண்டனை உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் வழக்கறிஞர்கள் வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. இது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE