தாய்லாந்து நாடாளுமன்றத்தில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஒச்சா வெற்றி பெற்று பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
முன்னாள் இராணுவத் தளபதியான தாய்லாந்தின் பிரதம மந்திரி பிரயுத், நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். இதனால் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள மார்ச் மாதம் வரை இவரின் பதவிக்கு ஆபத்து இல்லை.
பிரதமர் பிரயுத் மற்றும் அவரது அரசாங்கம் ஊழல் மற்றும் தவறான பொருளாதார நிர்வாகத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தமுள்ள 477 உறுப்பினர்களில் 239க்கும் அதிகமான வாக்குகள் தேவைப்பட்டன. நான்கு நாட்கள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள போதுமான வாக்குகளை பிரயுத் பெற்றார்.
இன்று வெளியான நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில், பிரயுத் 256 வாக்குகளையும், அவருக்கு எதிராக 206 வாக்குகளும் கிடைத்தன. ஒன்பது பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. 2019-ம் ஆண்டில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பிரயுத் எதிர்கொள்ளும் நான்காவது நம்பிக்கை வாக்கெடுப்பு இதுவாகும். அந்த தேர்தலின்போதே வெற்றிபெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட விதிகளின் கீழ் பிரயுத் தேர்தலை நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை சரியாக கையாளவில்லை என கடந்த ஆண்டு செப்டம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் பிரயுத்தின் அரசாங்கம் 264 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது.
பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளாக தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி பிரயுத்தின் புகழ் குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது. ஆனால் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் பிரயுத் இதுவரை அறிவிக்கவில்லை.