எகிறும் விலைவாசி... உலக நாடுகளின் நிலவரம் என்ன?

By ஆர்.என்.சர்மா

பத்திரிகைகளில் அன்றாடம் இடம்பெறும் விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதம் என்ற சொற்கள் ஒரே செயலைக் குறிப்பனவா அல்லது வெவ்வேறா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவது உண்டு. விலைவாசி உயர்வு என்பது அனைவராலும் உணரப்படுவது. பணவீக்க விகிதம் என்பது அதன் விளைவைக் காட்டும் அடையாளம். அது மட்டுமல்ல அதன் மதிப்பீடும் ஆகும். இரண்டையும் ஒன்றாகவே கருதுவதில் தவறுமில்லை.

பணவீக்கத்தை அளவிட அனைத்து வகைப் பொருட்களின் விலைவாசிகளும் அடங்கிய பெரிய குறியீட்டெண்ணைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஏழைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு உணவு தானியம், அதைச் சமைப்பதற்கான எரிபொருள், காய்கறி, வேலைக்குச் சென்றுவர ஆகும் போக்குவரத்துச் செலவு என்று ஒரு சில இனங்களுடன் குறியீடுகள் முடிந்துவிடும். எனவே பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவிக்கும்போது ஏழைகள் மலைப்பார்கள் - “என்ன கட்டுக்குள் இருக்கிறதா, நம்முடைய நிலை பெரிய திண்டாட்டமாக இருக்கிறதே” என்று. மொத்தவிலை - சில்லறைவிலை குறியீட்டெண்கள் கணக்கிடப்பட்டு அமைப்பு சார்ந்த நிரந்தர ஊதியமுள்ள தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தித் தரப்படும். (இந்த கால அவகாசம் அரசு அல்லது தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை மாறுபடுவதும் உண்டு). தொகுப்பூதியதாரர்களுக்கு இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே விலைவாசி உயர்வு அரசுக்கும் பெரிய தலைவலிதான்.

உலகின் எல்லா நாடுகளுமே இன்றைக்கு விலையுயர்வால் அவதிப்படுகின்றன. பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கடந்த நாற்பது ஆண்டுகளில் இருந்திராத வகையில் வருடாந்திர பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வீட்டு வாடகை, உணவுக்காகும் செலவு, மின் கட்டணம், வீடு கட்டுவதற்கான சிமென்ட்-ஜல்லி-மண்-மரம் ஆகியவற்றின் விலை, பேருந்து-ரயில்-விமானப் பயணக் கட்டணம் என்று அனைத்துமே உயர்ந்து விட்டன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதையே பணவீக்கம் என்று சொல்லிவிடலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் கடந்த மாதம் செலவிட்ட அதே தொகைக்கு அதைவிடக் குறைவாகவே பொருள்களை வாங்க முடிவது அல்லது கடந்த மாதம் வாங்கிய அதே அளவுக்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதுதான் பணவீக்கம். இப்படிப் பணம் வீங்குவதற்குப் பல காரணங்கள் உண்டு. நாம் வாங்க நினைக்கும் பொருள்களின் உற்பத்தி அல்லது விளைச்சல் குறைந்தால் அல்லது அவையிரண்டும் அதே அளவில் இருந்தும் திடீரென தேவை அதிகரித்துவிட்டால் விலை அதிகரிக்கும். பண்டங்களின் வரத்து, உற்பத்தி குறைந்தால் தேவையைவிட அளிப்பு குறைவாக இருப்பதால் விலை உயரும்.

உலகம் முழுவதுமே 2019 முதல் மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட பொதுமுடக்கத்தால் அவதிப்பட்டு மீண்டு வருவதால் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் உற்பத்திக் குறைவும் இருக்கிறது. அத்துடன் உற்பத்தியாளர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாக வருமானம் இல்லாமல் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும் உற்பத்தியைத் தொடர முன்பைவிட அதிகம் செலவழிக்க வேண்டியிருப்பதாலும் விலையை உயர்த்துகின்றனர். ஆடம்பரப் பொருளின் விலை அதிகரித்தால் அதை வாங்காமல் தவிர்க்கலாம் அல்லது ஒத்திப்போடலாம். அவசியப் பொருளை வாங்காமல் தவிர்க்க முடியாது, சில வேளைகளில் உணவுப் பொருளைக்கூட அளவு குறைத்து வாங்கி, சாப்பிடும் வேளையைக் குறைத்துக் கொள்கிறார்கள் வறியவர்கள். இதுதான் ஆபத்தானது.

பொதுமுடக்கம் காரணமாகத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. சரக்கு – பயணிகள் போக்குவரத்து முடங்கியது. சேவைத் துறையில் பெருமளவு இயங்கினாலும் பண சுழற்சிக்கேற்பவே அதன் விற்றுமுதல் இருந்தது. விவசாயத் துறை மட்டும் வேறு வழியில்லாததால் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டது. ஆனால் விவசாயத்துக்கும் தேவைப்பட்ட இடுபொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. ரசாயன உரம் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால் இடுபொருள் செலவு, விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியம், போக்குவரத்துச் செலவு ஆகியவை விவசாயிகளுக்கு சுமையாகி வருகிறது. உற்பத்திச் செலவுக்கேற்ப கொள்முதல் விலை உயரவில்லை. விலைவாசி உயர்வுக்குத் தேவை அதிகரிப்பு அல்லது அளிப்பு குறைவு ஆகியவை காரணமாக இருக்கும் என்பார்கள் பொருளியலாளர்கள். இங்கே இரண்டுமே காரணங்களாகத் தொடர்கின்றன. எனவேதான் விலை உயர்வும் தீவிரமாக இருக்கிறது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கை இன்னமும் முடியவில்லை. இயற்கை எரிவாயு, கச்சா பெட்ரோலிய எண்ணெய், கோதுமை, பார்லி உள்ளிட்ட உணவு தானியங்கள் ஆகியவை ஏற்றுமதியாவதில் சிக்கல் நேரிட்டுவிட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கோதுமை, கோதுமை மாவு இரண்டும் கிட்டத்தட்ட தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ரஷ்யாவும் உக்ரைனும் உரத் தயாரிப்பிலும் முன்னணி நாடுகள். அவ்விரண்டின் ஏற்றுமதியை நம்பித்தான் பல நாடுகள் இருக்கின்றன. எனவே உரங்களின் விலையும் 300 சதவீதம் உயர்ந்துள்ளது.

விலைவாசியைக் குறைக்க அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் (நம் நாட்டில் ரிசர்வ் வங்கி) வட்டி வீதத்தை உயர்த்துகின்றன. இதனால் மக்கள் தங்களிடமுள்ள உபரியை அல்லது சேமிப்பை வங்கிகளில் டெபாசிட் செய்வார்கள். எது தேவையோ அதற்கு மட்டும்தான் செலவிட மக்களிடம் பணம் இருக்கும். இது ஓரளவுக்கே விலைவாசியைக் கட்டுப்படுத்த உதவும். ஆயினும் வங்கிகளிடம் டெபாசிட்டுகள் கணிசமாக இருந்தால் தொழில் – வர்த்தக நடவடிக்கைகளுக்கு தாராளமாகக் கடன் வழங்க முடியும்.

எல்லோருக்குமே பொது

விலைவாசி உயர்வு ஏழைகளுக்கு மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொது. ஆனால் பாதிக்கப்படுவது ஏழைகள், நடுத்தர மக்களே. உலகின் 44 வளர்ந்துவரும் நாடுகளில் 37 நாடுகளில் பணவீக்க விகிதம் 2020 முதல் காலாண்டில் இருந்ததுடன் ஒப்பிடுகையில், 2022 முதல் காலாண்டில் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் 25 மடங்கு அதாவது 2,500 சதவீதம் அதிகரித்திருக்கிறது! கிரேக்கமும் இத்தாலியும் அடுத்து வருகின்றன. கடந்த மார்ச்சுக்குப் பிறகு உலக மக்களில் மேலும் ஏழு கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்கும் கீழே தள்ளப்பட்டுவிட்டனர்.

ஊதியம் அல்லது கூலி அதிகரிப்பு இல்லாத தொழில்களைச் செய்வோர் விலைவாசி உயர்வால் மிகவும் துயரப்படுகின்றனர். குறைந்த ஓய்வூதியம் பெறுவோர் நிலைமையும் மோசமாகி வருகிறது.

எரிபொருள் விலை உயர்வுக்குப் பல காரணங்கள். அவற்றில் தலையாயது பெருந்தொற்றுக் காலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுக்க மூடப்பட்டன. அன்றாடம் 33 லட்சம் பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஆலைகள் வேலையே இல்லாமல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சுணங்கியிருந்தன. பெருந்தொற்று மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் ஈரான், வெனிசூலா உள்ளிட்ட பெரிய எண்ணெய் வள நாடுகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி நிலைமையை மோசமாக்கிவிட்டன. இப்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் வாங்கக் கூடாது என்ற தடை நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. அமெரிக்காவில் பெருந்தொற்று தொடங்கும்போது ஒரு காலன் பெட்ரோல் அல்லது காசோலின் இரண்டரை டாலர்களாக இருந்தது. இப்போது 5 டாலர்களாகிவிட்டது (ரூபாய் 400). உலகளாவிய எண்ணெய்த் தேவையைச் சமாளிக்க புதிய எண்ணெய் சுத்திகரிப்பாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால் அவை உற்பத்தியை 2023-ம் ஆண்டுவாக்கில்தான் தொடங்க முடியும்.

ஐரோப்பிய நாடுகளின் மின்சாரக் கட்டணம் வழக்கமான சராசரியைப் போல பத்து மடங்கு அதிகரித்துவிட்டது. அங்கே மின்சாரம் வீடுகளில் விளக்கு எரிக்க, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகிய சாதனங்களுக்கும் தேவை. அதைவிட முக்கியம் குளிர்காலத்தில் வீடுகளைக் கதகதப்பாக வைத்திருக்கவும் மின்சாரம் அதிகம் செலவாகிறது. இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் பழைய விறகு அடுப்புகள், சூரிய ஒளி மின்சார அடுப்புகள் ஆகியவற்றை நாடத் தொடங்கிவிட்டார்கள். கச்சா பெட்ரோலிய எண்ணெய் பீப்பாய் 110 டாலர்கள் வரையில் உயரும் என்று கணித்துள்ளார்கள். பெருந்தொற்று தொடங்கியபோது இது வெறும் 40 டாலர்களாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயரப்போகிறது.

உலகில் விளையும் கோதுமை, பார்லி உள்ளிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துகளில் 40 சதவீதம் ரஷ்யாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும்தான் கிடைக்கின்றன. உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்டு முடக்கப்பட்டுவிட்டதால் அங்கிருந்து எதையும் ஏற்றுமதி செய்ய முடியாது. ரஷ்யா விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அதனாலும் விற்க முடியாது. இப்போது உக்ரைன் உணவு தானியங்களை விற்க ரஷ்யா பல நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது செயல்பாட்டுக்கு வந்தால்தான் பெரிய நிவாரணம் ஏற்படும். உணவு தானிய விலையுயர்வு, தட்டுப்பாடு காரணமாக இப்போதே ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் 45 நாடுகளில் வறுமைக் கோட்டுக்கும் கீழே சென்றுவிட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் என்ற முகமை தெரிவிக்கிறது. அதுபோக பல நாடுகளில் வறட்சியும் தலைதூக்கி வருகிறது. நைஜீரியா, எகிப்து, அல்ஜீரியா, எத்தியோப்பியா, மொராக்கோ, கென்யா, யேமன், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கோதுமை விலையுயர்வால் மிகவும் பாதிக்கப்படும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரையில் கோதுமை விலையில் 45% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளைத்தான் சார்ந்துள்ளன. கடந்த மார்ச் முதல் அமெரிக்கா தன்னுடைய வங்கி வட்டி வீதங்களை ஒன்றரை சதவீதத்துக்கும் மேல் உயர்த்திவிட்டது. இதை மீண்டும் அது மேற்கொள்ளவே வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் வட்டி வீதம் அதிகரித்தால் வங்கிகளிடம் கடன் வாங்குவோர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளக்கூடும் அல்லது தேவையைக் குறைத்துக்கொள்ளக்கூடும். இது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லதல்ல. எனவே விலைவாசியையும் கட்டுப்படுத்த வேண்டும், வளர்ச்சியையும் பராமரித்தாக வேண்டும். எல்லா நாடுகளுக்குமே இது இரட்டைச் சவால்.

அரசுகளின் செலவு உடனடியாக வருவாயை ஈட்டித்தருவதாகவும் வேலைவாய்ப்பு, உற்பத்தியைப் பெருக்குவதாகவும் இருக்க வேண்டும். உணவு தானிய உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும். அடித்தளக் கட்டமைப்பு வேலைகளைத் திட்டமிட்டு முடிக்க வேண்டும். போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்க வேண்டும். அரசுகள் தங்களுடைய கையிருப்புகளை முதலீடுகளாக மாற்ற வேண்டும். தனியார் சேமிக்கவும் அதை நல்ல முறையில் முதலீடு செய்யவும் வழிகாட்ட வேண்டும். பண்டங்களின் உற்பத்தி, வினியோகம், விலை நிலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஊக வியாபாரம், பதுக்கல், கொள்ளை லாபம் ஆகியவற்றுக்கு இடம்தரக் கூடாது. இவ்வளவும் நடந்தால் நிலைமை சீராகலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE