‘மின் பயன்பாட்டை குறையுங்கள்...வெப்ப அலை வதைக்கிறது’ - எச்சரிக்கும் அமெரிக்க மாகாணங்கள்!

By காமதேனு

அமெரிக்கவில் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், மின் நுகர்வினைக் குறைக்குமாறு மக்களுக்கு அந்த நாட்டின் மாகாணங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்காவில் வெப்ப அலை இந்த வார தீவிரமடைந்துள்ளது. மேலும், கடும் வெப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மூச்சுத் திணறல் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய வானிலை சேவை அமைப்பு (NWS) வெளியிட்ட ட்வீட்டில், "இந்த வாரம் இதுவரை 60 தினசரி உயர் வெப்பநிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஏனெனில் ஆபத்தான வெப்பம் நாட்டின் பெரும்பகுதியை சூழ்ந்துள்ளது. அடுத்த வாரத்தில் இந்த வெப்பம் இன்னும் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் தெற்கு அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் (38 டிகிரி செல்சியஸ்) வரை உயர்ந்துள்ளது, சில பகுதிகளில் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டுகிறது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முழுவதும் இந்த வார இறுதியில் அதிக வெப்பநிலை மேலும் உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன் மற்றும் பிலடெல்பியா ஆகிய இரண்டு மாகாணங்களும் வெப்ப அவசரநிலைகளை அறிவித்துள்ளன. மேலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் எச்சரித்துள்ளன. இது தொடர்பாக வாஷிங்டன் மேயர் முரியல் பவுசர் வெளியிட்ட ட்வீட்டில், " உடலில் நீர்ச்சத்தினை இழக்காமல் இருங்கள், சூரிய ஒளியில் இருந்து காத்துக்கொள்ளுங்கள். வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் செல்லப்பிராணிகளைப் கவனியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஏர் கண்டிஷனிங் உள்ளது. இது வெப்ப அலையின் உடல்நல அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. ஆனால் ஏசிக்களின் அதிக உபயோகத்தின் காரணாமாக மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டெக்சாஸ் மாகாணத்தில் 2 மணி முதல் இரவு 8 மணி வரை முக்கிய மின் உபகரணங்களை இயக்காமல் மின் நுகர்வினைக் குறைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோலவே நியூயார்க் நகரம் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனிங்களை 78 டிகிரி பாரன்ஹீட் அளவில் வைத்து மின்சாரத்தை சேமிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டுள்ளது போன்ற வெப்ப அலைகள் இனி அடிக்கடி தீவிரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE