ரணில் அதிபரானதற்கு எதிர்ப்பு: இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் போராட்டம்!

By காமதேனு

கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பின்னர் இலங்கையில் குறைந்திருந்த போராட்டங்கள், இன்று ரணில் விக்ரமசிங்கே அதிபரான பின்னர் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது.

இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிக வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் இதுநாள் வரை அமைதியான முறையில் போராடிவந்த போராட்டக்காரர்கள், ரணில் அதிபரான தகவல் கிடைத்ததும் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை முன்பு குவியத் தொடங்கியுள்ளனர். எனவே அதிபர் மாளிகையைச் சுற்றி 50 மீட்டருக்குள் போராட்டக்காரர்கள் நுழையக்கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய போராட்டக்காரர்கள், “கோத்தபய ராஜபக்சவிடம் காணப்பட்ட அதே மதிப்புகள், ஊழல்கள் மற்றும் அடக்குமுறை ரணிலிடமும் காணப்படுகின்றன. ரணில் வீட்டிற்கு செல்லும் வரை நாங்கள் போராட்டத்தை தொடர்வோம். இதற்கு ஒரு வாரம், ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது 98 நாட்கள் ஆகலாம். ஆனால், இலங்கையில் உள்ள மக்கள் அதற்காக போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை, நாங்கள் மீண்டும் வீதிக்கு வருவோம்" என்று கூறினார்கள்.

முன்னதாக, இன்று காலை இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த அதிபர் பதவிக்கான ரகசிய வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 225 எம்.பிக்களில், 134 எம்.பிக்களின் ஆதரவைப்பெற்று ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வானார். இவருக்கு கோத்தபய ராஜபக்சவின் எஸ்எல்பிபி தனது முழு ஆதரவை அளித்தது. இதனை அடுத்து டளஸ் அலஹப்பெருமா 82 வாக்குகளும், அனுரகுமர திஸாநாயகே 3 வாக்குகளையும் பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE