இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ‘பிஸி’யான லண்டன் தீயணைப்பு வீரர்கள்!

By காமதேனு

ஐரோப்பாவில் வெப்பம் வாட்டியெடுத்துவருகிறது. பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பநிலை நேற்று (ஜூலை 19) பதிவானது. 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிரிட்டன் புழுங்கித் தவித்தது. இதனால் ஆங்காங்கு காட்டுத் தீ, தீவிபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன, இந்நிலையில், நேற்றைய தினம் லண்டன் நகரைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் கடும் பணிச் சுமைக்கு ஆளானது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அதிக அளவிலான பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இன்று பிரிட்டனில் வெப்பநிலை ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் சாலைகள், இருப்புப் பாதைகள், விமான நிலையங்களில் பழுதுநீக்கும் பணிகள் நடக்கின்றன. கடும் வெப்பத்தால் ஏற்பட்ட தண்டவாளங்கள், சிக்னல் அமைப்புகள், மின் ஒயர்கள் போன்றவற்றில் எற்பட்ட பாதிப்புகள் காரணமாக நேற்று பல ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

கண்ணாடி மூலம் ஊடுருவும் வெப்பத்தின் மூலம் தீவிபத்துகள் ஏற்படும் என்பதால், பொது இடங்களில் கண்ணாடி பாட்டில்களை வைத்திருப்பது, மாமிசத் துண்டுகளைச் சூடாக்கும் பார்பெக்யூ (BBQ) அமைப்பைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்குமாறு லண்டன் மேயர் சாதிக் கான் கேட்டுக்கொண்டிருக்கிறார். லண்டனில் பரபரப்பான நாட்களில், தீயணைப்புத் துறைக்கு சராசரியாக 500 அழைப்புகள் வரும். ஆனால், நேற்று ஒரு நாளில் மட்டும் 2,600 அழைப்புகள் வந்தன என சாதிக் கான் தெரிவித்திருக்கிறார்.

லண்டன் கிரீன் பார்க் பகுதியில் செயற்கை நீரூற்றிலிருந்து நீரை எடுத்துப் பருகும் மக்கள்...

லண்டன், லெய்செஸ்டர்ஷையர், சவுத் யார்க்‌ஷையர் போன்ற நகரங்களின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் தீ விபத்தில் சிக்கின. வறண்ட புற்கள் நிறைந்த பகுதிகள், காய்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் கடும் வெப்பத்தின் காரணமாகத் தீ விபத்துகள் ஏற்பட்டன.

“புற்கள் வைக்கோலைப் போன்றவை. அதனால், எளிதில் தீப்பற்றக்கூடியவை. புற்களில் நெருப்பு பற்றிக்கொண்டால், திரைப்படங்களில் வரும் காட்டுத் தீ போல அல்லது கலிபோர்னியா, பிரான்ஸின் சில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டது போல மளமளவெனப் பரவிவிடும்” என்று ‘பிபிசி ரேடியோ 4’ வானொலிக்குப் பேட்டியளித்த சாதிக் கான் தெரிவித்தார்.

லண்டனில் மட்டும் 16 தீயணைப்பு வீரர்கள் தீக்காயத்துக்குள்ளானர்கள். அவர்களில் இருவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தீயணைப்புப் பணிகளிலும் மீட்புப் பணிகளிலும் ஈடுபடுவது தங்கள் வீரர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது என லண்டன் தீயணைப்புத் துறையின் உதவி ஆணையர் ஜொனாதன் ஸ்மித், ‘டைம்ஸ்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் சமோரா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு வீரர்கள்

பிரிட்டன் மட்டுமல்ல, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளின் நகரங்களும் கிராமங்களும் கடும் வெப்பத்தில் தவித்துக்கொண்டிருக்கின்றன. பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது. பருவநிலை மாற்றம், புவி வெப்படைதல் ஆகியவற்றின் கோர விளைவுகளை ஐரோப்பா நேரடியாக எதிர்கொண்டிருக்கிறது.

“சமீப நாட்களாக நாம் பார்த்துவரும் நிகழ்வுகள் சாதாரணமானவை அல்ல, இது ஒரு எச்சரிக்கை சமிக்ஞை” என்று லண்டன் கருவூலத்தின் தலைமைச் செயலர் சைமன் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE