பிரதமர் மோடியை பாராட்டிய பில்கேட்ஸ்: என்ன காரணம் தெரியுமா?

By காமதேனு

200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதற்காக, இந்திய பிரதமர் மோடிக்கு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "200 கோடி தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லை அடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். கோவிட்-19 இன் தாக்கத்தை தணித்ததற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடன் எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் 18 மாதங்களில் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 98 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியும், 90 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனைக் குறித்து ட்வீட் செய்த பிரதமர் மோடி , “இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டியதற்காக இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஒப்பிட முடியாத உயரத்தை அடைந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். கரோனா தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரை இது வலிமையடையச் செய்தது” என தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE