இலங்கை அதிபர் ரேஸில் இருந்து விலகினார் சஜித் பிரேமதாசா: இறுதிப்போட்டியில் 3 பேர்!

By காமதேனு

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். தற்போது அதிபர் பதவிக்கான போட்டியில் மூன்று எம்.பி.க்கள் களத்தில் உள்ளனர்.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டளஸ் அலஹப்பெருமா, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய செயல் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் ஜேவிபியின் அனுரகுமார திஸாநாயகே ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபர் போட்டியில் இருந்து விலகினார். இது தொடர்பாக சஜித் பிரேமதாசா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் .ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். எமது எஸ்ஜேபி கட்சியும், கூட்டணி கட்சிகளும் டளஸ் அலஹப்பெருமாவை வெற்றிபெறச் செய்வதற்கு கடுமையாக உழைக்கும்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள ரகசிய வாக்குப்பதிவில் 225 எம்.பி.க்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த மும்முனைச் போட்டியில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு பாதிக்கு மேல் வாக்குகள் தேவைப்படும். மூன்று வேட்பாளர்களில் யாரேனும் இந்த பெரும்பான்மையை பெற முடியாவிட்டால், குறைந்த அளவு வாக்குகள் பெற்ற வேட்பாளர் முதலில் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். அதைத் தொடர்ந்து இரண்டாவது விருப்பத்தின்படி வாக்குகள் கணக்கிடப்பட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

கோத்தபய ராஜபக்சவின் எஸ்எல்பிபி கட்சி இலங்கை நாடாளுமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாகும். அந்தக் கட்சி ரணிலை ஆதரிப்பதாக அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு உட்கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பை சந்தித்தது. எனவே எஸ்எல்பிபி கட்சியின் தனிப்பிரிவாக செயல்படும் டளஸ் போட்டியில் இறங்கியுள்ளார். தற்போது எஸ்ஜேபியும் டளஸ் அலகப்பெருமாவை ஆதரிப்பதால் இலங்கை அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE