‘நிறைய வேலை நிலுவையில் இருக்கிறது... உங்கள் வீட்டு ஆண்களை அனுப்புங்கள்!’

By காமதேனு

2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் வசம் மீண்டும் சென்றுவிட்ட ஆப்கானிஸ்தான், அடிப்படைவாதிகளின் ஆட்சியில் மிகப் பெரிய சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு உதவிவந்த மேற்கத்திய நாடுகள், தாலிபான் அரசுக்கு நிதியுதவி வழங்க மறுத்துவிட்டதால் அந்நாட்டு மக்களில் பலர் வேலையிழந்து பெரும் பொருளாதாரச் சிக்கலில் தவித்துவருகின்றனர். குறிப்பாக, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதுடன், அரசுப் பணிகளில் இருந்த பெண்கள் பலர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்னமும் முறைப்படி பணிநீக்கம் செய்யப்படவில்லை. பலர் பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மிகக் குறைவான சம்பளம் பெயரளவுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நிதித் துறையில் பணியாற்றிய பெண்களுக்கு அரசு சார்பில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதில், அலுவலகங்களில் நிறைய வேலைகள் நிலுவையில் இருப்பதால், பெண் ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஓர் ஆணைப் பணிக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சிலருக்கு நிதித் துறையின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவிலிருந்து தொலைபேசி அழைப்பும் சென்றிருக்கிறது.

பல ஆண்டுகள் அந்தத் துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பெண்களுக்குப் பதிலாக, ஆண் எனும் ஒரே தகுதியை முன்வைத்து அவர்களின் உறவினர்களைப் பணியில் சேர்த்துக்கொள்ள தாலிபான் அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்நடவடிக்கை ஆப்கன் பெண்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேசமயம், தாலிபான் அரசின் இந்தத் தவறான நடவடிக்கைக்கு எதிராக ஆப்கன் பெண் ஊழியர்கள் அணிதிரளத் தொடங்கியிருக்கின்றனர். இதற்காக நிதித் துறை பெண் ஊழியர்கள் அடங்கிய குழுவை சில பெண்கள் உருவாக்கியிருக்கின்றனர். தங்களது உரிமையைப் பறிக்கக் கூடாது என தாலிபான் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தங்கள் கோரிக்கை செவிசாய்க்கப்படாவிட்டால் போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டிருக்கும் பெண் ஊழியர்கள், இவ்விஷயத்தில் தங்களுக்கு உதவுமாறு சர்வதேச அமைப்புகளின் உதவியையும் நாடியிருக்கின்றனர்.

தாலிபான்களின் ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு பாதிப்புகளை ஆப்கானியர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 2 கோடி பேர் பட்டினியில் வாடுவதாக ஐநா தெரிவித்திருக்கிறது. 90 லட்சம் பேர் வீடிழந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு கடும் வறட்சி நிலவுவதால் விவசாயமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய தேதிக்கு, சுகாதாரத் துறையில் பணிபுரியும் பெண்களும் ஆசிரியைகளும்தான் பணி செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் அவர்களுக்குப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும் தாலிபான்களின் செயலால், ஆப்கானிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஐநா மகளிர் பிரிவின் நிர்வாக இயக்குநர் சீமா பஹாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அது ஆப்கன் ஜிடிபியில் ஏறத்தாழ 5 சதவீதம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE