‘பத்திரிகையாளர் கஷோகி கொலைக்கு நீங்கள்தான் பொறுப்பு’ - சவுதி இளவரசரிடம் நேரடியாக சொன்ன ஜோ பைடன்!

By காமதேனு

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைக்கு நீங்கள்தான் பொறுப்பு என நேரடியாக தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஜெட்டா நகரில் அந்நாட்டின் இளவரசர் சல்மானை சந்தித்து ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பைடன் " பத்திரிகையாளர் கஷோகியின் கொலை குறித்து கஷோகியுடனான கூட்டத்தின்போது கேள்வி எழுப்பினேன், அந்த நேரத்தில் அதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை நேரடியாக விவாதித்தேன். நான் எனது பார்வையை தெளிவாகச் சொன்னேன். கஷோகியின் மரணத்துக்கு சவுதி இளவரசர்தான் காரணம் என கூறினேன். அதற்கு அவர் தனிப்பட்ட முறையில் நான் இதற்கு பொறுப்பல்ல என்று கூறினார்,

கஷோகியை கொல்லும் நடவடிக்கைக்கு பட்டத்து இளவரசர் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது. கஷோகிக்கு நடந்தது மூர்க்கத்தனமானது” என்று கூறினார்.

மேலும் சவுதி இளவரசருடன் எரிசக்தி குறித்தும் விவாதித்ததாகவும், எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடான சவுதி அரேபியாவின் எரிசக்தி தொடர்பாக வரும் வாரங்களில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அதிபர் பைடன் கூறினார்.

சவுதி ஆட்சியை விமர்சித்த அமெரிக்க பத்திரிகையாளர், 2018 இல் துருக்கியில் கொல்லப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒரு இரகசிய உளவுத்துறை அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தக் கொலையில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்புள்ளதாக வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில் சவுதி இளவரசரின் முஷ்டியுடன், ஜோ பைடனின் முஷ்டியை மோதும் படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ள கஷோகியின் காதலி ஹடிஸ் செங்கிஸ், கஷோகி எழுதியது போல ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில், “ பைடன் அவர்களே என் கொலைக்கு நீங்கள் உறுதியளித்த பொறுப்பு இதுதானா?. பாதிக்கப்பட்டவரின் இரத்தம் உங்கள் கைகளில் உள்ளது" என்று தெரிவித்துள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE